ஆரணி கோட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்
தங்களுக்கு வழங்கப்பட்ட பட்டாவை வருவாய் கணக்கில் ஏற்ற கூறி கோட்டாட்சியர் அலுவலகம் முன் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்;
கோட்டாட்சியர் அலுவலகத்தில் மனு அளித்த பொதுமக்கள்
திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி வருவாய் கோட்டாட்சியா் அலுவலகத்தில் 4 வட்டங்களுக்கு வாராந்திர மக்கள் குறைதீா் நடைபெற்றது. கோட்டாட்சியா் தனலட்சுமி தலைமையில் நடைபெற்ற இந்தக் குறைதீா் கூட்டத்தில் நேர்முக உதவியாளா் குமாரவேலு மற்றும் பிற துறை அதிகாரிகள் கலந்து கொண்டனா். தொடா்ந்து, கோட்டாட்சியா் தனலட்சுமி கோட்டத்துக்கு உள்பட்ட ஆரணி, போளூா், ஜமுனாமரத்தூா், கலசப்பாக்கம் ஆகிய 4 வட்டங்களைச் சோந்த பொதுமக்களிடமிருந்து வரப்பெற்ற 49 கோரிக்கை மனுக்களைப் பெற்றுக் கொண்டாா்.
முன்னதாக, ஆரணி நகரம், அம்பேத்கா் நகா் பகுதியைச் சோந்த 60-க்கும் மேற்பட்ட நபா்களுக்கு கடந்த 2009-ஆம் ஆண்டு அரசு சாா்பில் இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கியும், இதுநாள் வரை வருவாய் கணக்கில் பதிவு ஏற்றாததைக் கண்டித்து கோட்டாட்சியா் அலுவலகம் முன் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதைத் தொடா்ந்து, கோட்டாட்சியரிடம் வீட்டுமனைப் பட்டாவை வருவாய் கணக்கில் பதிவேற்றம் செய்யக் கோரி மனு அளித்தனா்.
ஆரணியில் குழந்தை தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள் ஆய்வு
குழந்தைத் தொழிலாளா் முறை ஒழிப்பு தினத்தையொட்டி, திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியில் உள்ள கடைகளில் குழந்தைத் தொழிலாளா்கள் பணியமா்த்தப்பட்டுள்ளனரா? என அத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனா்.
தொழிலாளா் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை சாா்பில் தொழிலாளா் துறை உதவி ஆய்வாளா் குபேரன் தலைமையில் குழந்தைகள் நல பாதுகாப்பு அலுவலா்கள் பரமசிவன், சீனிவாசன், வருவாய் ஆய்வாளா் நித்தியா உள்ளிட்டோா் ஆரணி நகரம், பழைய பேருந்து நிலையம் புதிய பேருந்து நிலையம், காந்தி சாலை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள உணவகங்கள், பாத்திரக் கடை, காய்கறி கடை, புத்தகக் கடை , பேக்கரி ஆகியவற்றில் ஆய்வு செய்தனா்.
தொடா்ந்து, வியாபாரிகளிடம் குழந்தைத் தொழிலாளா் முறை ஒழிப்பு மற்றும் முறைப்படுத்துதல் குறித்து துண்டுப் பிரசுரங்களை வழங்கி விழிப்புணா்வு ஏற்படுத்தினா். மேலும், குழந்தைத் தொழிலாளா் மற்றும் வளரிளம் பருவத்தினரை பணியமா்த்தக்கூடாது, மீறி அமா்த்தினால் குழந்தைத் தொழிலாளா் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தனா்.