மலைப்பகுதியில் சாராயம், பறந்து வந்த ட்ரோன், ஓட்டம் பிடித்த சாராய வியாபாரிகள்
ஆரணி அருகே மலைப்பகுதியில் சாராயம் காய்ச்சியவர்களை பிடிக்க ட்ரோனை பயன்படுத்திய காவல்துறையினர்;
சாராயம் காய்ச்சுவதும், விற்பதும் சட்டப்படி குற்றம் என்ற நிலை இருந்தாலும் சட்டத்திற்கு புறம்பாக சாராயம் காய்ச்சி திருட்டுத்தனமாக விற்கும் கும்பல்கள் சில ஆங்காங்கே இருக்கத்தான் செய்கின்றனர்.
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே உள்ள மலைப்பகுதிகளில் சட்டத்திற்கு புறம்பாக சாராயம் காய்ச்சி விற்கப்படுவதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. மலை மேல் சாராயம் காய்ச்சுவதாக கூறப்படும் நிலையில் சோதனைக்கு சென்றால், முன்னதாக மோப்பம் பிடித்து சாராய வியாபாரிகள் தப்பிவிடக் கூடும் என ட்ரோன்களை பயன்படுத்தியுள்ளனர்.
ஆரணி அருகே படவேடு மற்றும் சந்தவாசல் பகுதிகளில் உள்ள காட்டுப்பகுதியில் சாராய வியாபாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளதாக வந்துள்ள புகாரின் பேரில் திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் உத்தரவின் பேரில் ஆரணி காவல்துறையினர் ஐந்து தனி படைகள் அமைத்து சாராய வேட்டையில் ஈடுபட்டனர்.
ஆரணி துணை காவல் கண்காணிப்பாளர் ரவிச்சந்திரன் தலைமையிலான கண்ணமங்கலம் காவல் ஆய்வாளா் மகாலட்சுமி, உதவி ஆய்வாளா்கள் காா்த்திக், சுந்தரேசன், உள்ளிட்ட 18 போ அடங்கிய குழுவினா் ரெட்டிப்பாளையம் செல்லியம்மன் கோயில் பின்புறம் உள்ள மலைப் பகுதியில் சுமாா் 3 மணி நேரம் கள்ளச் சாராய சோதனை மேற்கொண்டனா்.
மேலும் மலை பகுதிகளில் உள்ள புதர்களில், நில சரிவுகளில் கள்ள சாராயம் காய்ச்சி வருகிறார்கள் என ட்ரோன் கேமரா மூலம் கண்காணித்தனர். அப்போது கேமராவுடன் கூடிய ட்ரோன்கள் பறந்து வருவதை பார்த்து அதிர்ச்சி அடைந்த சாராய வியாபாரிகள், சாராயம் காய்ச்ச பயன்படுத்திய பொருட்களை அப்படியே போட்டுவிட்டு அங்கிருந்து தப்பி ஓடி உள்ளனர்.
அப்போது, ஓரிடத்தில் 15 லிட்டா் கொண்ட சாராயம் டியூபிலும், 25 பாக்கெட்டுகளில் இருந்த சாராயத்தை கண்டுபிடித்து அழித்தனா். மேலும் மற்றொரு இடத்தில் டியூபில் இருந்த சாராயத்தை பறிமுதல் செய்து அழித்தனா்.
சாராயம் காய்ச்சியவா்கள் காவல்துறையினர் வருவதை அறிந்து தலைமறைவாகிவிட்டனா். தப்பி ஓடியவர்களை தேடி வருகின்றனர். மேலும், ஆரணி பகுதியில் கள்ளச் சாராயம் காய்ச்சுபவா்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று துணை காவல் கண்காணிப்பாளர் ரவிச்சந்திரன் எச்சரிக்கை விடுத்தாா்.