அண்ணன் இறந்த துக்கம் தாங்காமல் தம்பி மயங்கி விழுந்து மரணம்
சேத்துப்பட்டு அருகே அண்ணன் இறந்த துக்கம் தாங்காமல் தம்பியும் சுடுகாட்டிலே மயங்கி விழுந்து மரணம்;
திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு பழம்பேட்டை நேரு தெருவை சேர்ந்தவர் நாராயணன் (வயது 64). இவருக்கு மனைவி மற்றும் ஒரு மகன், மகள் உள்ளனர். நாராயணன் சேத்துப்பட்டு ஆரணி சாலையில் பெட்டிக்கடை நடத்தி வந்தார்.
நாராயணனின் தம்பி வெங்கடேசன் (58). இவருக்கு திருமணம் ஆகவில்லை. வெங்கடேசன் நாராயணன் வீட்டில் வசித்து வந்தார். நாராயணன் கடந்த 19 ஆம் தேதி உடல் நலக்குறைவால் உயிரிழந்தார். அண்ணன் இறந்த துக்கம் தாங்காமல் தம்பி வெங்கடேசன் அழுதுக்கொண்டே இருந்தார்.
இந்த நிலையில் மதியம் நாராயணன் உடலை சுடுகாட்டிற்கு எடுத்துச் சென்று இறுதி சடங்குகள் செய்து கொண்டிருந்தனர். அப்போது ஆழந்த சோகத்தில் இருந்த வெங்கடேசன் திடீரென மயங்கி விழுந்தார். அக்கம் பக்கம் உள்ளவர்கள் வெங்கடேசனை மீட்டு சேத்துப்பட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டுசென்றனர். அங்கு வெங்கடேசனை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
பின்னர் அங்கிருந்து வெங்கடேசன் உடலை வீட்டிற்கு எடுத்துச் சென்று இறுதி சடங்குகள் செய்யப்பட்டு நாராயணன் உடல் அருகே வெங்கடேசன் உடலும் தகனம் செய்யப்பட்டது. அண்ணன் இறந்த துக்கம் தாங்காமல் தம்பியும் சுடுகாட்டிலே இறந்துவிட்டதால் அவரது உறவினர்கள் மற்றும் அந்த கிராம மக்கள் சோகத்தில் ஆழ்ந்தனர்.