செல்போன் டவரில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த ஊராட்சி மன்ற உறுப்பினர்

மேல்நிலை நீர் தேக்க தொட்டி இடிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து செல்போன் டவரில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.;

Update: 2023-07-30 02:01 GMT

டெலிபோன் டவரில் ஏறிய வார்டு உறுப்பினர்.

மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இடிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஊராட்சி மன்ற உறுப்பினர் செல்போன் டவரில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே புதுப்பட்டு ஊராட்சியில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி பயனற்று கிடந்தது. இதையடுத்து இதனை அகற்ற ஊராட்சி மன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

பின்னர் ஆரணி ஊராட்சி ஒன்றியத்தில் வட்டார வளர்ச்சி அலுவலரிடமும் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து ஆரணி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் மூலம் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இடிக்க உத்தரவிடப்பட்டது.

புதுப்பட்டு ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவர் அஞ்சலாட்சி ரங்கநாதன், துணைத்தலைவர் ஜெய்க்கண்ணு மற்றும் வார்டு உறுப்பினர்கள் 5 பேர் உள்ளனர்.

இந்நிலையில் மூன்றாவது வார்டு உறுப்பினர் சரத்குமார் என்பவர் தனக்கு ஊராட்சி நிர்வாகம் எந்த தகவலும் தெரிவிக்கவில்லை.

மேலும் மேல்நிலை நீர் தேக்க தொட்டி அருகில் எனது வீடு உள்ளது வீட்டுக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால் யார் பதில் சொல்வது எனக்கூறி அதிகாரிகளிடம் கேட்டுள்ளார்.

பின்னர் திடீரென அப்பகுதியில் உள்ள டெலிபோன் டவரில் சுமார் 40 அடிக்கு மேல் ஏறி கீழே விழுந்து தற்கொலை செய்து கொள்வேன் என மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து தீயணைப்பு நிலையத்திற்கும் காவல்துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

தகவல் அறிந்த உடன் ஆரணி தீயணைப்பு நிலைய அலுவலர் கோபாலகிருஷ்ணன் மற்றும் வீரர்கள் சென்று பலமுறை குரல் கொடுத்தும் சரத்குமார் கீழே இறங்கவில்லை ,  மேலும் வட்டார வளர்ச்சி அலுவலர் இங்கே வர வேண்டும் என்று கூறினார்.

பின்னர் ஆரணி தாலுகா போலீச இன்ஸ்பெக்டர் ஷாபுதீன்  மற்றும் போலீசார் வட்டார வளர்ச்சி அலுவலகத்திற்கு சென்று வட்டார வளர்ச்சி அலுவலர் பிரபாகரனை அழைத்து வந்து வார்டு உறுப்பினர் சரத்குமார் இடம் பேச்சு வார்த்தை நடத்தினார்.

இதில் சமாதானம் அடைந்த வார்டுஉறுப்பினர் சரத்குமார் கீழே இறங்கி வந்தார். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.  இச்சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

Similar News