மழைநீர் தேங்கி அறுவடை செய்ய முடியாமல் விவசாயிகள் வேதனை
சேத்துப்பட்டு பகுதியில் மழை விட்டும், மழைநீர் தேங்கியுள்ளதால் அறுவடை செய்ய முடியாமல் நெல் விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர்
சேத்துப்பட்டு பகுதியில் உள்ள பல்வேறு ஊராட்சிகளில் கடந்த சில மாதங்களாக பலத்த மழை தொடர் மழை பெய்து ஏரி குளம் குட்டை என நீர்நிலைகளில் தண்ணீர் தேங்கியது. ஏரிகள் நிரம்பி உபரி நீர் வெளியேறி கோடி போனது. இதனால் மழைநீர் வயல்வெளி குடியிருப்பு பகுதிகளில் தேங்கி நிற்கிறது.
மேலும் செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் விவசாயிகள் குறுவை சாகு படியான ஐ ஆ ர் 50, கோ 51, என பல்வேறு நெல் வகைகளை சாகுபடி செய்திருந்தனர் . இந்த குறுவை சாகுபடி தற்போது அறுவடைக்கு தயாராக வந்துள்ளது. இந்நிலையில் மழை விட்டும் அறுவடைக்கு தயாராக உள்ள 150 ஏக்கர் விளைச்சலில் மழைநீர் தேங்கி நெல்மணிகள் முளைப்புத்திறன் ஏற்பட்டு நாற்று வளர்கிறது.
இதனால் விவசாயிகள் இயந்திரம் கொண்டும், ஆட்களைக் கொண்டும், அறுவடை செய்ய முடியாமல் வேதனை அடைந்து வருகின்றனர். வேளாண்மை துறை சார்பில் மீண்டும் கணக்கீடு செய்து உரிய நிவாரணம் பெற்றுத் தர வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனுக்களை அளித்துள்ளனர்.
இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில் ஒரு ஏக்கர் பயிரிட உழவு நடவு செலவு , மருந்து ஆகியவைகளுக்கு ரூபாய் 10,000 முதல் 15 ஆயிரம் வரை செலவாகிறது. தமிழக அரசு மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு இரண்டரை ஏக்கருக்கு ரூபாய் 20 ஆயிரம் வழங்குவது என்பது மிகவும் குறைச்சல் ஆனது. எனவே பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு மாவட்ட நிர்வாகம் கூடுதலாக நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்தனர்.