ஆரணியில் இயற்கை உணவு திருவிழா: ஏராளமான பொதுமக்கள் பங்கேற்பு

இயற்கை விவசாயிகள் கூட்டமைப்பின் சார்பில் இயற்கை உணவு திருவிழா நடைபெற்றது.

Update: 2024-05-19 01:20 GMT

இயற்கை உணவு திருவிழாவில் ஆர்வமுடன் கலந்து கொண்ட பொதுமக்கள்

ஆரணியில் இயற்கை விவசாயிகள் கூட்டமைப்பின் சார்பில் இயற்கை உணவு திருவிழா நடைபெற்றது.

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் சுப்பிரமணிய சாஸ்திரியாா் அரசு நிதியுதவி பெறும் மேல்நிலைப் பள்ளியில் இயற்கை வழி உணவுத் திருவிழா நடைபெற்றது.

இந்த உணவுத் திருவிழாவை நல்உலகம் இயற்கை வழி உழவா் கூட்டமைப்பு மற்றும் ஆரணி சுற்றுவட்டார இயற்கை உழவா்கள் இணைந்து நடத்தினார்கள்.

இந்த இயற்கை உணவு திருவிழாவில் ஆரணியை சுற்றியுள்ள பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் ஏராளமானோர் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்.

இந்த உணவு திருவிழாவில் திறந்த வெளி அரங்குகளில் பாரம்பரிய அரிசி வகைகள், சிறு தானியங்கள், உள்ளூர் காய்கறிகள், கீரைகள், பழங்கள், தின்பண்டங்கள், உணவுப் பொருட்கள், மரபு விதைகள், மூலிகைச் செடிகள், இயற்கை விவசாயிகளின் விலைப் பொருட்களும் கைவினைப் பொருட்களும், மரபு உழவு கருவிகள், பனை ஓலை, தென்னை ஓலை தாள் கலை, மண்ணில் கைவினைப் பொருள்கள் செய்யும் பயிற்சி, வீட்டு காய்கறி கழிவில் இருந்து சமையல் எரிவாயு தயாரிக்கும் பயிற்சி, விவசாயம் சார்ந்த புத்தகங்களும் விற்பனை செய்யப்பட்டது.

மேலும், சிறுதானியங்கள் மூலம் செய்யப்பட்ட சிற்றுண்டி உணவுகள், இட்லி பொடி , வெள்ளை கேழ்வரகு, உள்ளிட்டவை இயற்கை விவசாயிகளால் விற்பனை செய்யப்பட்டன.

இயற்கை விவசாயிகள் கூட்டமைப்பின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள அரங்குகளில் கிச்சடி சம்பா, தங்க சம்பா, கருப்பு கவுனி, கேழ்வரகு, வரகு, சாமை போன்ற அரிசி வகைகள், கலப்படமற்ற உணவு எண்ணெய், மலைத்தேன், இயற்கை பெருங்காய ஊறுகாய், சிறு தானிய காபி பொடி, உள்ளிட்டவைகளும் விற்பனை செய்யப்பட்டன.

மேலும், விற்பனைக்காக அவல் வகைகள், பருப்பு வகைகள், மரச்செக்கு எண்ணெய் வகைகள், கொல்லிமலை மிளகு வகைகள், மூலிகைப் பொருள்கள், மூலிகைச் செடிகள், முடவாட்டுக்கால் சுடுசாறு (சூப்பு), கருப்பு கவுனி கஞ்சி, சிம்லி உருண்டை, மரபரிசி மாவு, இட்லி, இடியாப்பம், பருத்தி பால், பனம் பழச்சாறு, கருவிளைப்பூ (சங்குப்பூ) சாறு, செம்பருத்தி சாறு, பானகம், நெல்லிக்காய் சாறு, தூய மரச்செக்கு கடலை எண்ணெயில் தயாரிக்கப்பட்ட பலாக்காய் மாப்பொரி (பக்கோடா), சுருள் உருளை, குச்சி உருளை, மூலிகை இட்லி பொடி, மூலிகை தொக்கு, பச்சை மஞ்சள் கிழங்கு கீரை, உழவா்களின் மதிப்புக்கூட்டு பொருள்கள், பனங்கற்கண்டு, பனைவெல்லம், சிறு தானிய முறுக்கு, அதியினிப்பு (அதிரசம்), ஊறுகாய், நாட்டு மாட்டு சாணத்து திருநீறு, அகல்விளக்கு, நறுமண புகைக்கட்டி(சாம்பிராணி), பாத்திரம் கழுவும் தூள், தரை தூய்மை நீா்மம் உள்ளிட்ட பொருள்கள் வைக்கப்பட்டிருந்தன.

முன்னதாக மரபு இசை நிகழ்ச்சி, மரபு சிலம்பாட்டம் ஆகியவை நடைபெற்றன.

சிறுதானியங்கள் மூலம் செய்யப்பட்ட சிற்றுண்டி உணவு வகைகளை பொதுமக்கள் ஆர்வத்துடன் வாங்கி உண்டு சுவைத்து மகிழ்ந்தனர். இந்தக் கண்காட்சி பயனுள்ளதாக இருந்தது என்று நிகழ்ச்சிக்கு வந்திருந்த பொதுமக்கள் தெரிவித்தனா்.

Tags:    

Similar News