திருவண்ணாமலை மாவட்டத்தில் புதிய தீயணைப்பு துறை அலுவலகம் திறப்பு
கண்ணமங்கலம் பேரூராட்சியில் புதிய தீயணைப்புத்துறை அலுவலகத்தை முதல்வர் ஸ்டாலின் வீடியோ கான்பரன்ஸ் மூலம் திறந்து வைத்தார்.;
கண்ணமங்கலத்தில் முதல்வர் வீடியோ கான்பரன்ஸ் மூலம் திறந்த புதிய தீயணைப்பு துறை அலுவலக வளாகத்தில் கலெக்டர் முருகேஷ் மற்றும் அதிகாரிகள்.
திருவண்ணாமலை மாவட்டம் கண்ணமங்கலம் பேரூராட்சியில் புதிய தீயணைப்பு துறை அலுவலகம் மற்றும் வாகனத்தை வீடியோ கான்பரன்ஸ் மூலம் சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.
இதனைத் தொடர்ந்து திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் முருகேஷ், புதிய தீயணைப்பு துறை அலுவலகத்தில் குத்து விளக்கேற்றி வைத்தார்.
பின்னர் அவர் கூறுகையில் , திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி வட்டத்துக்கு உட்பட்ட கண்ணமங்கலம் பேரூராட்சி சுற்றி சுமார் 150 க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன.
இந்த கிராமங்களில் தீ பற்றி விபத்து ஏற்பட்டால் ஆரணியில் இருந்து வாகனம் காலதாமதமாக செல்வதால் உயிர் சேதம் , பொருள் சேதம் ஏற்பட்டு வருகிறது. இதனை பொருட்டு கண்ணமங்கலம் பேரூராட்சி மன்ற தலைவர் மகாலட்சுமி பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ. வேலுவிடம் மனு கொடுத்திருந்தார்.
மேலும் தமிழக அரசிடம் கண்ணமங்கலம் பேரூராட்சிக்கு தனியாக தீயணைப்பு துறை நிலையம் திறக்க வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தார்.
இந்நிலையில் ஆரணி அருகே கண்ணமங்கலம் பேரூராட்சி புதுப்பேட்டை பகுதியில் ஒரு கோடியே 78 லட்சம் நிதியில் புதிய தீயணைப்பு துறை அலுவலகம் மற்றும் 55 லட்சம் மதிப்பில் புதிய தீயணைப்புத்துறை வாகனத்தை சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழக முதல்வர் வீடியோ கான்பரன்ஸ் மூலம் திறந்து வைத்துள்ளார்.
அவருக்கு இப்பகுதி மக்கள் சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம் என தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் மாவட்ட தீயணைப்பு துறை இணை இயக்குனர் சரவணகுமார் , தி.மு.க. வடக்கு மாவட்ட செயலாளர் தரணி வேந்தன், ஆரணி வருவாய் கோட்டாட்சியர் தனலட்சுமி, மாவட்ட ஊராட்சி குழு தலைவர் பார்வதி சீனிவாசன், முன்னாள் எம்எல்ஏ சிவானந்தம், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், ஒன்றிய செயலாளர்கள், தீயணைப்பு துறை அலுவலர்கள், பொதுமக்கள், அரசு ஊழியர்கள், திரளாக பங்கேற்றனர். பொதுமக்கள் அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது.