ஆரணி கடைகளில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் திடீர் ஆய்வு
ஆரணி நகர கடைகளில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் பா.முருகேஷ், மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் ராமகிருஷ்ணன் ஆகியோர் உத்தரவின் பேரில், ஆரணி நகர உணவு பாதுகாப்பு அலுவலர் கைலாஷ் குமார் மற்றும் அலுவலர்கள் நேற்று மாலை திடீரென ஆரணி நகரில் உள்ள கடைகளில் ஆய்வு மேற்கொண்டனர்.
மளிகைக் கடைகள், பேக்கரிகள், ஓட்டல்களில் ஆய்வு செய்தபோது அங்கு பயன்படுத்தப்பட்ட பிளாஸ்டிக் கவர்கள் பறிமுதல் செய்து அழித்தனர். 5 கடைகளுக்கு தலா ரூ.2 ஆயிரம் வீதம் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை வைத்திருந்த 3 கடைகளுக்கும் தலா ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்து அவர்களுக்கு எச்சரிக்கை விடப்பட்டது.
அதிக கலர்கள் பயன்படுத்தி உணவு பொருட்கள் தயாரித்த ஓட்டல்களில் இருந்து மாதிரிகளை சேகரித்து ஆய்வுக்கு அனுப்பப்பட்டன. பேருந்து நிலையத்தில் உள்ள கடைகளில் ஆய்வினை மேற்கொண்டனர். இதனால், அப்பகுதியில் சற்று பரபரப்பு நிலவியது.