ஆரணியில் தனியார் பள்ளி, கல்லூரி வாகனங்களை அதிகாரிகள் ஆய்வு
ஆரணியில் 284 தனியார் பள்ளி, கல்லூரி வாகனங்களை வருவாய் கோட்டாட்சியர் ஆய்வு செய்தார்.
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி - வேலூர் நெடுஞ்சாலையில் சேவூர் ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் அமைந்துள்ள மோட்டார் வாகன அலுவலக வெளிவளாகத்தில் ஆரணி, சேத்துப்பட்டு, போளூர் தாலுகா பகுதிகளில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளி, கல்லூரி வாகனங்கள் ஆரணி வருவாய் கோட்டாட்சியர் எம்.தனலட்சுமி தலைமையில் ஆய்வு செய்யப்பட்டது.
ஆரணி மோட்டார் வாகன அலுவலர் சரவணன், மோட்டார் வாகன ஆய்வாளர் முருகேசன் ஆகியோர் வாகனங்களை ஆய்வு செய்தனர். ஆரணி, சேத்துப்பட்டு, போளூர் வட்டங்களில் இருந்து 42 பள்ளிகளுக்கு உட்பட்ட 284 வாகனங்கள் ஆய்வு செய்யப்பட்டது.
அப்போது வாகனங்களில் முதலுதவி பெட்டி, அவசர வழி, ஓட்டுனர் உரிமம், சீருடைகள், வேக கட்டுப்பாட்டு கருவி, தீயணைப்பு கருவி என பல்வேறு சோதனைக்கு உட்படுத்தப்பட்டன.
இந்த ஆய்வின்போதுஆரணி டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் கோகுல்ராஜன், சப்-இன்ஸ்பெக்டர் சுந்தரேசன், ஆரணி தாசில்தார் க.பெருமாள், ஆரணி தீயணைப்பு நிலைய அலுவலர் கோபாலகிருஷ்ணன், ஆரணி கல்வி மாவட்ட அலுவலர் கோ.சந்தோஷ், ஓட்டுனர் பயிற்சி பள்ளி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
அதைத்தொடர்ந்து வாகனங்களில் தீ பிடித்தால் என்ன செய்வது, தீயை அணைப்பது எப்படி என்பது குறித்து டிரைவர்களுக்கு தீயணைப்பு துறையினர் தீத்தடுப்பு செயல் விளக்கம் செய்து காட்டினர்.