நிற்காமல் செல்லும் பேருந்துகள்: பள்ளி மாணவர்கள் சாலை மறியல்
திருவண்ணாமலை அருகே, நிற்காமல் செல்லும் பேருந்துகளால் பள்ளிக்கு தினசரி செல்ல முடியவில்லை என மாணவ, மாணவிகள் சாலை மறியலில் ஈடுபட்டன.
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த கண்ணமங்கலம் அருகே உள்ள பெரிய அய்யம்பாளையம் ஊராட்சிக்குட்பட்ட காந்தி நகர் பகுதி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளிலிருந்து தினமும் கண்ணமங்கலம் அரசு பள்ளி மற்றும் திருவண்ணாமலை வேலூர் கல்லூரிகளுக்கு செல்லும் மாணவர்கள் 200-க்கும் மேற்பட்டோர் காந்திநகர் பகுதியில் இருந்து பேருந்தில் பயணம் செய்வது வழக்கம்.
ஆனால் அந்த பகுதியில் நகரப்பேருந்து தவிர மற்ற பேருந்துகள் நிற்பதில்லை. காந்திநகர் பேருந்து நிலையத்தில் ஒரு சில நேரங்களில் நகரப் பேருந்துகள் கூட நிற்பதில்லை என மேலும் பள்ளிக்கு செல்ல முடியாமல் மாணவர்கள் மாணவிகள் அடிக்கடி பள்ளி விடுமுறை எடுக்கும் சூழ்நிலை உருவாகிறது என கூறி பள்ளி மாணவ மாணவிகள் மற்றும் கல்லூரி மாணவ மாணவிகள் அனைவரும் ஒன்றுகூடி சுமார் 200க்கும் மேற்பட்டோர் வேலூர் திருவண்ணாமலை நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
சுமார் 2 மணி நேரம் மறியல் செய்த பிறகு சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கண்ணமங்கலம் போலீசார், ஆரணி தாசில்தார், போக்குவரத்து மண்டல மேலாளர் உள்ளிட்டோர் மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி பின்னர் நீண்ட நேரப் போராட்டத்திற்குப் பின்பு மாணவர்கள் தங்களது சாலை மறியலை கைவிட்டனர்.