திருவண்ணாமலையில் தேசிய அளவிலான மக்கள் நீதிமன்றம்: 2170 வழக்குகள் முடித்து வைப்பு

திருவண்ணாமலை மாவட்டத்தில் நடந்த தேசிய அளவிலான மக்கள் நீதிமன்றத்தில் 2170 வழக்குகள் முடித்து வைக்கப்பட்டு தீர்வு காணப்பட்டது.;

Update: 2023-05-14 01:23 GMT

மக்கள் நீதிமன்றத்தில் முடித்து வைக்கப்பட்ட வழக்குகளின் உத்தரவுகளை வழங்கிய நீதிபதிகள்.

மாநில சட்டப் பணிகள் ஆணைக்குழுவின் உத்தரவின் பேரில் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அனைத்து கோர்ட்களிலும் சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் தேசிய அளவிலான மக்கள் நீதிமன்றம் நேற்று காலையில் தொடங்கி மாலை வரை நடைபெற்றது.

திருவண்ணாமலை மாவட்ட ஒருங்கிணைந்த கோர்ட் வளாகத்தில் நடைபெற்ற மக்கள் நீதிமன்றம் நிகழ்ச்சிக்கு மாவட்ட அமர்வு முதன்மை நீதிபதி மதுசூதனன் தலைமை தாங்கி கோர்ட் வளாகத்தில் மரக்கன்று நட்டு தொடங்கி வைத்து பேசினார். தலைமை குற்றவியல் நீதிமன்ற நீதிபதி ஈஸ்வரமூர்த்தி முன்னிலை வகித்தார். இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு அலுவலர் கோட்டீஸ்வரன் செய்திருந்தார்.

இதில் மோட்டார் வாகன விபத்து, சிவில் வழக்குகள், காசோலை வழக்குகள், சொத்து சம்பந்தமான வழக்குகள், வங்கியில் விவசாய கடன், கல்வி கடன் என பல்வேறு பிரிவுகளை சார்ந்த வழக்குகள் எடுக்கப்பட்டு விசாரிக்கப்பட்டது. பின்னர் வழக்குகள் சமரசம் செய்யப்பட்டு பல்வேறு வழக்குகள் முடித்து வைக்கப்பட்டது. இதில் மகிளா நீதிபதி சுஜாதா, சார்பு நீதிபதி பழனிவேல், கூடுதல் சார்பு நீதிபதி சாதிக்பாஷா, கூடுதல் உரிமையியல் நீதிபதி சுபாஷினி மற்றும் நீதிபதிகள், வழக்கறிஞர் என பலர் கலந்து கொண்டனர்.

இவற்றுடன் போளூர் வந்தவாசி ஆரணி செய்யாறு ஆகிய வட்ட சட்டப் பணிகள் குழுவின் அமர்வுகளிலும் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெற்று வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது.

மாவட்டம் முழுவதும் நடந்த மக்கள் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சுமார் 7 ஆயிரத்து 342 வழக்குகள் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டு 2170 வழக்குகள் முடித்து வைக்கப்பட்டது. இதன் மூலம் ரூ.7 கோடியே 73 லட்சத்து 96 ஆயிரத்து 914 இழப்பீடாக வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது.

ஆரணி:

ஆரணியில் மக்கள் நீதிமன்றத்தில் 222 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது.

ஆரணி கோட்டை மைதானம் அருகே உள்ள ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம் இன்று நடந்தது. மாவட்ட கூடுதல் விரைவு அமர்வு நீதிமன்ற நீதிபதி விஜயா தலைமை தாங்கினார். சார்பு நீதிபதி தாவூத் அம்மாள், மாவட்ட உரிமையியல் நீதிமன்ற நீதிபதி சதீஷ், நீதித்துறை நடுவர் நீதிமன்ற நீதிபதி கார்த்திகேயன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மக்கள் நீதிமன்றத்தில் மோட்டார் வாகன விபத்து நஷ்ட ஈடு வழக்கு, பத்திர வழக்கு, சொத்து வழக்கு, விவாகரத்து வழக்கு, சிறு விபத்து வழக்கு, காசோலை வழக்கு என 222 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. அதில் ஒரு வழக்கிற்கு ரூ.87 லட்சம் விபத்து நஷ்டஈடு வழங்க பயனாளியிடம் ஆணை வழங்கப்பட்டது. மொத்தம் ரூ.2 கோடி 63 லட்சத்து 81 ஆயிரத்து 900-க்கு தீர்வு காணப்பட்டது. முடிவில் வட்ட சட்டப்பணிகள் குழு நிர்வாக அலுவலர் வெங்கடேசன் நன்றி கூறினார்.

Tags:    

Similar News