ஆரணியில் சுற்றித்திரியும் கால்நடைகளால் வாகன ஓட்டிகளுக்கு கடும் அவதி

ஆரணியில் சாலையில் சுற்றித்திரியும் கால்நடைகளால் வாகன ஓட்டிகள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர்.;

Update: 2023-12-03 10:58 GMT

சாலையில் சுற்றித்திரிந்த மாடுகளை பறிமுதல் செய்த நகராட்சி ஊழியர்கள்

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி நகராட்சியில் சாலையில் சுற்றித்திரியும் கால்நடைகளால் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே கால்நடைகளின் உரிமையாளர்களுக்கு அபராதம் வதிக்க வேண்டும் என ஆரணி பொதுமக்கள் ஆரணி நகராட்சிக்கு கோரிக்கை வைத்திருந்தனர்.

ஆரணி நகராட்சியில் வசிக்கும் பெரும்பாலானோர் தங்களின் கால்நடைகளை வீடுகளில் கட்டி வைத்து வளர்க்காமல், சாலைகளில் அவிழ்த்து விடுகின்றனர். இதனால், ஏராளமான கால்நடைகள் பகல், இரவு நேரங்களில் சாலைகளில் சுற்றித்திரிந்து போக்குவரத்து நெரிசல் ஏற்படுத்துகிறது. இதனால், ஆரணி சுற்றுவட்டார கிராமங்கள், வெளியூர்களில் இருந்து பல்வேறு தேவைகளுக்காக நகரத்திற்கு வாகனங்களில் வந்து செல்வோர், பொதுமக்கள், வாகன ஓட்டிகள் சாலையில் சுற்றித்திரியும் மாடுகளால் கடும் சிரமத்திற்குள்ளாகி வருவதாக தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில் ஆரணியில் சுற்றித்திரிந்த மாடுகளை நகராட்சி பணியாளா்கள் பறிமுதல் செய்தனா்.

ஆரணி நகா்மன்றத் தலைவா் மணி ஆலோசனையின் பேரில், நகராட்சி ஆணையா் குமரன் உத்தரவின் பேரில், நகரின் முக்கிய பகுதிகள் மற்றும் சாலைகளில் சுற்றித் திரியும் மாடுகளை பிடிக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது.

தெரு நாய்களால் பொதுமக்கள் வாகன ஓட்டிகள் அவதி

செங்கத்தில் சாலைகளில் சுற்றித் திரியும் தெரு நாய்களால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.

செங்கம் துக்காப்பேட்டை, பழைய பேருந்து நிலையம், போளூா் சாலை, இராஜ வீதி, பெருமாள் கோவில் தெரு, தளவாநாய்க்கன்பேட்டை, குப்பனத்தம் சாலை பகுதிகளில் தெரு நாய்கள் சாலைகளில் கூட்டம் கூட்டமாக சுற்றித் திரிகின்றன.

குறிப்பாக, இறைச்சிக் கடைகள் இருக்கும் பகுதியில் 10-க்கும் மேற்பட்ட நாய்கள் முகாமிட்டுக்கொண்டு கழிவு இறைச்சிகளை உண்பதற்காக ஒன்றோடு ஒன்று சண்டையிட்டு சாலையில் வரும் வாகனம் தெரியாமல் ஓடுகின்றன. அப்போது, அந்த வழியாகச் செல்லும் இரு சக்கர வாகன ஓட்டிகள் நாய்கள் மீது வாகனத்தை ஏற்றி விபத்துக்கள் நிகழ்கின்றன.

அதேநேரத்தில், பெரிய வாகனங்கள் வரும்போது வாகனத்தில் சிக்கி நாய்கள் இறக்க நேரிடுகிறது. சாலையில் அடிப்பட்டு இறந்துபோகும் நாய்களை உடனடியாக அப்புறப்படுத்தும் பணி நடைபெறுவதில்லை.

மேலும், செங்கம் சுற்றப்புற பகுதியில் ஆடு, கோழி வளா்க்கும் பகுதிக்குச் சென்று நாய்கள் ஆடு, கோழிகளை கடித்து விடுகின்றன. சில நேரங்களில் கோழிப் பண்ணையில் இருந்து கோழிக் குஞ்சுகளை தூக்கிச் சென்றுவிடுகின்றன.

தெரு நாய்களால் பொதுமக்களுக்கும், கோழி வளா்ப்பவா்களுக்கும் தினசரி பல்வேறு இடையூறுகள் ஏற்படுகின்றன.

இதனால், சம்பந்தப்பட்ட நிா்வாகம் கண்காணித்து செங்கம் நகரில் சுற்றித் திரியும் நாய்களை பிடிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என பொதுமக்கள் எதிா்பாா்க்கின்றனா்.

Tags:    

Similar News