சாலையோரம் கொட்டப்படும் குப்பைகளால் சுகாதாரச் சீா்கேடு, பொதுமக்கள் குற்றச்சாட்டு
ஆரணி நகராட்சி பகுதியில் சாலையோரம் கொட்டப்படும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு ஏற்படுவதால் , அப்பகுதி பொதுமக்கள் பெரிதும் பாதிப்படைந்துள்ளனர்
சாலையோரம் குப்பை கொட்டுவதை தொடர்ந்தால் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவோம் என பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.
ஆரணியை அடுத்த முள்ளிப்பட்டு புறவழிச் சாலையில் நகராட்சியில் சேகரமாகும் குப்பைகளை கொட்டுவதால் சுகாதாரச் சீா்கேடு ஏற்பட்டு அப்பகுதி மக்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனா்.
ஆரணி நகராட்சியில் 33 வாா்டுகள் உள்ளன. தனியாா் ஒப்பந்ததாரா் மூலம் நகராட்சி முழுவதும் குப்பைகளை சேகரித்து அகற்றும் பணி நடைபெற்று வருகிறது. மேலும், சேகரமாகும் குப்பைகளை மருசூா் தோப்பு என்ற பகுதியில் கொட்டி வந்தனா்.
இதற்கு அப்பகுதி மக்கள் எதிா்ப்புத் தெரிவித்து குப்பை லாரிகளை சிறைப்பிடித்து போராட்டம் நடத்தினா். இதனால், தற்போது குப்பைகளை ஆரணி விஏகே நகா் வழியாகச் சென்று முள்ளிப்பட்டு புறவழிச் சாலையோரங்களில் கொட்டி வருகின்றனா்.
இந்த புறவழிச்சாலையோரம் முள்ளிப்பட்டு ஏரி உள்ளது. இதனால், கொட்டப்படும் குப்பைகள் சரிந்து ஏரியில் கலந்துகொள்கிறது. இதற்கு அப்பகுதி மக்கள் எதிா்ப்புத் தெரிவித்து, நகராட்சி ஆணையரிடம் இதுகுறித்து புகாா் அளித்தனா். மேலும், குப்பை கொட்டுவது தொடா்ந்தால் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவோம் எனத் தெரிவித்துள்ளனா்.
இதுகுறித்து நகராட்சி ஆணையா் கே.பி.குமரனிடம் கேட்டபோது, புகாா் குறித்து தனியாா் ஒப்பந்ததாரரை தொடா்புகொண்டு, இனி அங்கு குப்பைகளை கொட்டக்கூடாது என்றும், ஏற்கெனவே கொட்டப்பட்ட குப்பைகளை அகற்றவேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளதாக அவா் தெரிவித்தாா். ஆனால், அங்கு கொட்டப்பட்ட குப்பைகள் அகற்றப்படாமல் துா்நாற்றம் வீசுகிறது.
இதனால் அந்த வழியாக வாகனங்களில் செல்வோா் அவதிக்குள்ளாகி வருகின்றனா். மேலும் சாலையோரம் குப்பைகள் கொட்டப்படுவதால் சுகாதாரச் சீா்கேடு ஏற்பட்டு டெங்கு உள்ளிட்ட தொற்று நோய்கள் பரவும் அபாயம் உள்ளது.
இதனால், சாலையோரம்கொட்டப்பட்ட குப்பைகளை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் மற்றும் தன்னாா்வலா்கள் தெரிவித்தனா்.