வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் தற்செயல் விடுப்பு போராட்டம்: பொதுமக்கள் அவதி
வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் நடத்திய தற்செயல் விடுப்பு போராட்டம் காரணமாக மனு அளிக்க வந்த பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.;
அலுவலர்கள் இல்லாமல் வெறிச்சோடி காணப்பட்ட ஆரணி தாலுகா அலுவலகம்
தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் தற்செயல் விடுப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் மனு அளிக்க முடியாமல் பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.
தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம் சார்பில் 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மாநிலம் தழுவிய ஒட்டுமொத்த தற்செயல் விடுப்பு போராட்டம் நடைபெற்றது. அதன்படி திருவண்ணாமலை மாவட்டத்திலும் வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் தற்செயல் விடுப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த போராட்டத்தில், தொடர்ந்து 4 ஆண்டுகளாக வெளியிடப்படாமல் உள்ள துணை ஆட்சியர் பட்டியலை உடனே வெளியிட்டு பதவி உயர்வு வழங்கிட வேண்டும்.
அலுவலக உதவியாளர் காலியிடங்களை நிரப்பிட வருவாய் நிர்வாக ஆணையர் கடிதம் வழங்க வேண்டும்.
உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் துணை தாசில்தார் உள்பட பட்டியல்கள் திருத்தத்தின் காரணமாக பணியிறக்கம் செய்யப்பட்ட அலுவலர்களின் பாதிப்புகளை தவிர்த்து பதவி உயர்வினை உறுதி செய்து உரிய ஆணைகள் வெளியிட வேண்டும்.
ஆகஸ்டு மாதம் 2022-ல் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் தலைமையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் ஏற்றுக்கொள்ளப்பட்ட அனைத்து கோரிக்கைகளின் மீதும் உரிய காலக்கெடுவிற்குள் ஆணைகள் வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.
இந்த தற்செயல்விடுப்பு போராட்டத்தினால் மாவட்டத்தில் உள்ள தாலுகா அலுவலகம் உள்ளிட்ட வருவாய் துறை அலுவலகங்களில் அலுவலர்கள் இல்லாமல் வெறிச்சோடி காணப்பட்டது. மேலும் திருவண்ணாமலை தாலுகா அலுவலகம் உள்ளிட்ட சில அலுவலகங்களில் முன்பக்க கதவுகள் மூடப்பட்டு காணப்பட்டது. இதனால் பல்வேறு கோரிக்கைகளுக்காக மனு அளிக்க வந்த பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.
மேலும் திருவண்ணாமலை மாவட்டத்தில் ஆரணி, செய்யாறு தாலுகா அலுவலகங்களில் தமிழ்நாடு வருவாய் துறை அலுவலர் சங்கத்தின் சார்பாக தற்செயல் விடுப்பு எடுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்
இதனால் ஆரணி, செய்யாறு தாலுகா அலுவலகத்தில் அனைத்து கோப்புகளும் எந்தவிதமான செயல்பாட்டுக்கும் வரப்படவில்லை அதிகாரிகள் யாரும் இல்லாததால் தாலுகா அலுவலகத்திற்கு வந்த பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.