ரயில்வே பாலம் அமைக்க நிலம் எடுப்பு: உரிய இழப்பீடு வழங்க கோரிக்கை
கண்ணமங்கலம் அருகே ரயில்வே பாலம் அமைக்க நிலம் எடுப்பதற்கு உரிய இழப்பீடு வழங்க நில உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்தனர்;
திருவண்ணாமலை மாவட்டம் கண்ணமங்கலம் அருகே வல்லம் கிராமத்தில் ரயில்வே மேம்பாலம் அமைக்கும் பணியால் பாதிக்கப்பட்டவர்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. ஊராட்சி மன்ற தலைவர் சிவகுமார் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் நில உரிமையாளர்கள் சுமார் 150 பேர் கலந்து கொண்டனர்.
வல்லம் மற்றும் கீழ் பள்ளிப்பட்டு கிராமங்களுக்கு இடையே ரயில்வே மேம்பாலம் அமைக்கும் பணிக்காக நிலம் எடுக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்படுபவர்களுக்கு நில எடுப்பு அலுவலர்கள் உரிய இழப்பீடு தொகையை முறைப்படி தெரிவிக்காமல் விஏஓ மூலம் வங்கிக்கணக்கு, பட்டா எண் உள்ளிட்ட விவரங்களை பெற முயற்சிப்பதாக குற்றம் சாட்டினர்.
மேலும் இது அரசு விதிமுறைகளுக்கு எதிரானது ஆகும், இழப்பீடு தொகையை சட்டபூர்வமாக அறிவித்தபின் நில எடுப்பு பணிகளை தொடங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.
கண்ணமங்கலம் ஊராட்சியில் இது குறித்து தீர்மானம் நிறைவேற்றி மாவட்ட வருவாய் அலுவலரிடம் மனு அளித்தனர். மேலும் ஆரணி நாடாளுமன்ற உறுப்பினர் விஷ்ணு பிரசாத்திடம் தங்களுக்கு சேர வேண்டிய இழப்பீடு தொகையை நிர்ணயித்த பிறகு மேம்பாலம் கட்டும் பணியைத் தொடங்க வேண்டும் என மனு அளித்தனர்.