உரிய ஆவணங்களின்றி எடுத்துச்சென்ற காமாட்சியம்மன் விளக்குகள் பறிமுதல்
ஆரணியில் உரிய ஆவணங்களின்றி மொபட்டில் கொண்டு சென்ற 140 பித்தளை காமாட்சியம்மன் விளக்குகளை பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்
ஆரணியில் உரிய ஆவணங்களின்றி மொபட்டில் கொண்டு சென்ற 140 பித்தளை காமாட்சியம்மன் விளக்குகளை பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு வெளியானவுடன் உடனடியாக தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தது. ஆரணி நகரசபை தேர்தலையொட்டி பறக்கும் படை குழு அமைக்கப்பட்டது.
இந்த நிலையில் நேற்று இரவு ஆரணி தச்சூர் சாலை அருகே மண்டல துணை வட்டாட்சியர் குமரேசன் தலைமையில், பறக்கும்படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது மொபட்டில் வந்த நபரை பிடித்து சோதனை செய்தபோது அவர் பாத்திர கடையில் வேலை செய்வதாகவும், உரிய ஆவணங்கள் இல்லாமல் 140 பித்தளை காமாட்சியம்மன் விளக்குகள் கொண்டு சென்றதும் தெரிய வந்தது.
இதையடுத்து பித்தளை காமாட்சி விளக்குகள் பறிமுதல் செய்து ஆரணி நகராட்சி ஆணையாளரும், தேர்தல் நடத்தும் அலுவலரான பி.தமிழ்ச்செல்வியிடம் ஒப்படைக்கப்பட்டது .
மேலும் அவற்றை கொண்டு வந்தவரிடம் விசாரித்ததில் அவர் கீழ்பென்னாத்தூர் பகுதியை சேர்ந்த ராஜா என்பதும், அவர் ஆரணி மற்றும் சுற்றுவட்டார பகுதியில் உள்ள கடைகளில் பித்தளை விளக்குகளை விற்பனை செய்பவர் என்பதும் பாத்திரக்கடையில் விற்பனை செய்வதற்காக 140 பித்தளை காமாட்சி அம்மன் விளக்குகளை கொண்டு வந்துள்ளதும் தெரிய வந்தது.
அவர் புதுச்சேரியில் இருந்து கொள்முதல் செய்யப்பட்ட ரசீதை கொண்டு வந்திருப்பதாகவும் ஆரணியில் உள்ள கடையில் விற்பனை செய்வதற்காக விளக்குகளைக் கொண்டு வந்ததாகவும் விற்பனை செய்யும் போதுதான் அவருக்கு பில் போடப்படும் என தெரிவித்தார். இதையடுத்து தேர்தல் முடிந்தவுடன் ரசீது கொண்டு வந்து காண்பித்து விளக்குகளை பெற்று செல்லுமாறு அதிகாரிகள் கூறினர்.