ஆரணியில் வேலை வாங்கித்தருவதாக கூறி பெண்ணிடம் நூதன மோசடி
ஆரணியில் வேலை வாங்கித்தருவதாக பெண்ணிடம் நூதன முறையில் மோசடி செய்தவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.;
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி சைதாப்பேட்டை நாய்க்கன்பாளையம் பகுதியை சேர்ந்தவர் தஸ்தகீர். இவரது மனைவி அசின் (வயது 20). இவரை தொடர்பு கொண்டு பேசிய ஒருவர் ஆரணியில் தனியார் நிறுவனத்தில் வேலை இருப்பதாகவும், வரும் போது நகையை அணிந்து கொண்டு வரவேண்டும் என்றும் கூறியுள்ளார்.
அதன்பேரில் அசின் 4½ பவுன் நகைகளை அணிந்துகொண்டு ஆரணி பழைய பஸ் நிலையம் அருகில் வந்துள்ளார். அப்போது அங்கு வந்த டிப்-டாப் ஆசாமி, அசினை ஆட்டோவில் ஆரணிப்பாளையம் பகுதிக்கு அழைத்து சென்றுள்ளார்.
பின்னர் அங்குள்ள ஒரு மாடி வீட்டிற்கு சென்றதும் நகைகளை அணிந்து மேலே வர வேண்டாம் நகைகளை கழட்டி பையில் வைத்துவிட்டு வா என கூறியுள்ளார். பின்னர் டிப்-டாப் ஆசாமி பையில் வைத்திருந்த நகைகளை வாங்கிக்கொண்டு அங்கிருந்து தலைமறைவாகிவிட்டார். நீண்ட நேரமாகியும் அந்த டிப்-டாப் ஆசாமி வராததால், தான் ஏமாற்றப்பட்டது தெரியவந்தது.
இதுகுறித்து ஆரணி நகர காவல் நிலையத்தில் அசின் புகார் செய்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் கோகுல் ராஜன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து, அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர். மேலும் டிப்-டாப் ஆசாமியை வலைவீசி தேடி வருகின்றனர்.