சேத்துப்பட்டு அருகே அரசு நடுநிலைப்பள்ளியில் புதிய கட்டிடங்கள் திறப்பு
சேத்துப்பட்டு அருகே ரூ.31 லட்சத்தில் கட்டப்பட்ட ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி கட்டிடங்களை எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்.;
சட்டமன்ற தொகுதி உறுப்பினர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் புதிய பள்ளி கட்டிடத்தை திறந்து வைத்து மாணவர்களிடையே பேசினார்.
திருவண்ணாமலை, மாவட்டம் சேத்துப்பட்டு, அருகே உள்ள கரிப்பூர், கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 1முதல் 8ம் வகுப்பில் 135, மாணவர்கள் படித்து வருகின்றனர். பள்ளி கட்டிடம் மிகவும் பழைய கட்டிடத்தில் இயங்கி வந்தது.மேலும் கட்டிடம் மிகவும் சேதம் அடைந்ததால், ஆரணி சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதி திட்டத்தின் கீழ் ரூ.26 லட்சம், மதிப்பீட்டில் 3 வகுப்பறைகள், கொண்ட புதிய பள்ளி கட்டிடமும், மேலும் குடிநீர் வசதி, கழிப்பறைகள், ஆகியவை ரூ.5 லட்சம் மதிப்பீட்டில் புதியதாக கட்டப்பட்டு, இதன் திறப்பு விழா நடந்தது
திறப்பு விழாவிற்கு ஆரணி கல்வி மாவட்ட அலுவலர் சந்தோஷ், தலைமை தாங்கினார். மேற்கு ஆரணி ஒன்றிய குழு உறுப்பினர் ஜெயச்சந்திரன், கரிப்பூர் ஊராட்சி மன்ற தலைவர் மதியழகன், ஆகியோர் முன்னிலை வகித்தனர். அனைவரையும் பள்ளி தலைமை ஆசிரியர் செல்வி, வரவேற்றார்.
விழாவில் சிறப்பு அழைப்பாளராக முன்னாள் அமைச்சரும், ஆரணி சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான சேவூர் எஸ்.ராமச்சந்திரன், கலந்துகொண்டு புதிய பள்ளி கட்டிடத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்து இனிப்பு வழங்கி மாணவர்களிடையே பேசினார்.
முன்னதாக பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டார். விழாவில் ஆரணி நகர மன்ற துணைத்தலைவர் பாரி பாபு, மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர்கள் கோவிந்தராஜ், பூங்கொடி, திருமால், ஒன்றியகுழு உறுப்பினர் கணேசன், கரிப்பூர் கிளை கழக செயலாளர் தணிகைவேல், மற்றும் பள்ளிக் கல்வித் துறையினர், ஆசிரியர்கள், ஊர் பெரியவர்கள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.