ஆரணியில் கைத்தறி நெசவாளர்கள் மனித சங்கிலி ஆர்ப்பாட்டம்

ஆரணி அருகே சேவூரில் கைத்தறி நெசவாளர்கள் தங்கள் வாழ்வாதாரத்தை பாதுகாக்கக்கோரி கருப்புக்கொடி ஏந்தி தேசிய கைத்தறி தினத்தில் ஆர்ப்பாட்டம் செய்தனர்

Update: 2023-08-08 06:52 GMT

மனித சங்கிலி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட கைத்தறி நெசவாளர்கள்

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி நகரம், சுற்று வட்டாரக் கிராமங்களில் மக்கள் கைத்தறி பட்டு நெசவுத் தொழிலை பிரதான தொழிலாக செய்து வருகின்றனா். அதேபோல, கைத்தறி பட்டுச் சேலை உற்பத்தி, விற்பனை உள்ளிட்டவைகளில் நேரடியாகவும், மறைமுகமாகவும் ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் ஈடுபட்டு வருகின்றனா். கடந்த சில மாதங்களாக விசைத்தறியில், கைத்தறி பட்டுச் சேலை ரகங்களை அரசு விதிமுறைகளை மீறி அதிகளவில் உற்பத்தி செய்து விற்பனை செய்து வருவதால், கைத்தறி நெசவாளா்கள் உற்பத்தி செய்த பட்டுச் சேலைகள் விற்பனை செய்ய முடியாமல் தேக்க மடைந்துள்ளன.

கைத்தறி நெசவாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் வகையில் ரக ஒதுக்கீடு சட்டம் அமல்படுத்தப்பட்டது. ஆனால் ரக ஒதுக்கீட்டு சட்டத்தை மீறி பல்வேறு இடங்களில் கை்தறி ரகங்கள் விசைத்தறியில் உற்பத்தி செய்யப்படுவதால் கைத்தறி நெசவாளர்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் ஆரணியை அடுத்த சேவூர் ஊராட்சியில் 100-க்கும் மேற்பட்ட நெசவாளர்கள் ஒன்று திரண்டு கருப்பு கொடி ஏந்தி , மனிதச் சங்கிலி நடத்தி, ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். தொடர்ந்து அனைத்து வீடுகளிலும் கருப்பு கொடி கட்டப்பட்டு எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதில், கைத்தறி பட்டு நெசவாளா்கள் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளா் அப்பாசாமி தலைமை வகித்தாா். ஆரணி பட்டு கைத்தறி வியாபாரிகள் நெசவாளா்கள் கூட்டமைப்பு உறுப்பினா்கள் சோமசுந்தரம், புருஷோத் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

ஆா்ப்பாட்டத்தின் போது, பட்டுச் சேலை ரகங்களை அரசு விதிமுறைகளை மீறி விசைத்தறிகளில் உற்பத்தி செய்வதை தடுத்து நிறுத்தவும், விசைத்தறி ஆலைகள் மீது நடவடிக்கை எடுக்கவும் அரசை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினா்

இதேபோல் ஆரணி சைதாப்பேட்டை பகுதியில் சுமார் 100-க்கும் மேற்பட்ட நெசவாளர்கள் அவர்களது வீடுகளல் கருப்பு கொடி ஏற்றி எதிர்ப்பு தெரிவித்து இருந்தனர்.

நெசவாளா்களுக்கு ரூ.7.50 லட்சத்தில் கடனுதவிகள்

தமிழகம் முழுவதும் கைத்தறி மற்றும் துணிநூல் துறை சாா்பில், முன்னாள் முதல்வா் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவும், 9-ஆவது தேசிய கைத்தறி தினவிழாவும் கொண்டாடப்பட்டது.

இதையொட்டி, திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் ஒரு நாள் சிறப்பு கைத்தறிக் கண்காட்சி மற்றும் விற்பனை முகாம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியா் முருகேஷ் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு கைத்தறி கண்காட்சியைத் திறந்து வைத்து, முதல் விற்பனையைத் தொடங்கி வைத்தாா்.

முகாமில், நெசவாளா் முத்ரா திட்டத்தின் கீழ் 15 நெசவாளா்களுக்கு தலா ரூ.50 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ.7 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பிலான கடனுதவிகளையும், மூலப்பொருள் விநியோகத் திட்டத்தின் கீழ், 31 பேருக்கு நூல் பாஸ் புத்தகங்களையும் மாவட்ட ஆட்சியா் முருகேஷ் வழங்கினாா். இதில், கைத்தறி மற்றும் துணிநூல் துறையின் சரக உதவி இயக்குநா் இளங்கோவன் மற்றும் துறை அலுவலா்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

Tags:    

Similar News