ஆரணியில் தரமற்ற உணவகங்களை கண்டித்து இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம்
ஆரணியில் தரமற்ற முறையில் செயல்படும் உணவகங்களை கண்டித்து இந்து முன்னணி ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.;
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி நகரில் தரமற்ற முறையில் செயல்படும் அசைவ உணவகங்களை கண்டித்தும், உணவகங்களை கண்காணிக்கத் தவறிய அரசு அதிகாரிகளை கண்டித்தும் இந்து முன்னணி சார்பில் ஆரணி மணிக்கூண்டு அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் தாமோதரன் தலைமை வகித்தார். இந்து முன்னணி கோட்ட தலைவர் மகேஷ் கோட்ட அமைப்பாளர் ராஜேஷ் ஆகியோர் கண்டன உரையாற்றினர். ஆரணி நகரில் செயல்படும் அசைவ உணவகங்களில் கெட்டுப்போன இறைச்சிகளை கொண்டு தரமற்ற வகையிலும் சுகாதாரமற்ற முறையில் தயாரிக்கப்படும் அசைவ உணவு வகைகளை உண்ணுகின்ற மக்கள் பலவிதமாக நோய்களுக்கு ஆளாகிறார்கள். இதை கண்காணிக்கத் தவறிய உணவு பாதுகாப்புத் துறையினர், சுகாதார துறையினரின் மெத்தன போக்கால் இரண்டு உயிர்கள் பலியாகியுள்ளன ஆகையால் சுகாதாரமற்ற உணவகங்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி முழக்கமிட்டனர். நகர தலைவர் நாகராஜன், முத்து, விக்னேஷ் ஒன்றிய செயலாளர்கள் ,இந்து முன்னணி உறுப்பினர்கள், பாரதிய ஜனதா உறுப்பினர்கள் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.