ஆரணி அருகே திடீரென தரை இறங்கிய ஹெலிகாப்டர்கள்: கிராம மக்கள் அதிர்ச்சி

ஆரணி அருகே திடீரென இரண்டு ஹெலிகாப்டர்கள் தரை இறங்கியதால் கிராம மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

Update: 2024-05-26 01:44 GMT

திடீரென பறந்து வந்த இரண்டு ஹெலிகாப்டர்கள்

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே 2 ஹெலிகாப்டர்கள் திடீரென தரை இறக்கப்பட்ட சம்பவத்தை கண்டு கிராம மக்கள் அதிர்ச்சியும் பரபரப்பு அடைந்தனர்.

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே கண்ணமங்கலம் அடுத்த இரும்புலி கிராமத்தில் நேற்று மாலை திடீரென இரண்டு ஹெலிகாப்டர்கள் தரை இறக்கப்பட்டு ஒரு ஹெலிகாப்டரில் இருந்து வீரர்கள் மற்றொரு ஹெலிகாப்டர்களுக்கு மாறி உள்ளனர்.

அப்பகுதியில் விவசாயம் செய்து கொண்டிருந்த கிராம மக்கள் இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்து அதனை தங்களது செல்போன்களில் படம் பிடித்துள்ளனர்

அந்த வீடியோவை சமூக வலைத்தளங்களில் அனுப்பி வைத்துள்ளனர். தொடர்ந்து காவல்துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையினர் மற்றும் வருவாய்த்துறையினர் அந்த இரண்டு ஹெலிகாப்டர்களும் எங்கிருந்து வந்தது ஏன் இங்கு வந்து தரை இறங்கியது என்று தெரியாமல் குழப்பத்தில் இருந்தனர்.

சமூக வலைதளங்களில் வந்த இந்த வீடியோவை பார்த்து விட்டு அரக்கோணம் கடற்படை விமான நிலைய செய்தி மற்றும் மக்கள் தொடர்புத்துறை அதிகாரி பொன்னியின் செல்வன், உடனடியாக அதிகாரிகளுக்கு ஆடியோ மூலம் விளக்கம் அளித்தார்.

இந்தியாவின் கடற்படை விமான நிலையமான அரக்கோணம் ராஜாளி விமான நிலையத்திலிருந்து பெறப்பட்ட தகவலின் அடிப்படையில், இது ஹெலிகாப்டர் பைலட்டுகளுக்காக வழக்கமாக வழங்கப்படும் பயிற்சிதான் என்றும், இது குறித்து அச்சப்படத் தேவையில்லை என்றும் அந்த ஆடியோவில் செய்தி மற்றும் மக்கள் தொடர்பு துறை அதிகாரி தெரிவித்து இருந்தார்

மேலும் தரையில் இருந்து குறிப்பிட்ட தொலைவில் ஹெலிகாப்டரை நிலை நிறுத்த முயற்சிக்கும் பயிற்சிதான் இது என்றும் கடற்படை விமான நிலைய செய்தி மற்றும் மக்கள் தொடர்பு அதிகாரி பொன்னியின் செல்வன் ஆடியோ மூலம் அதிகாரிகளுக்கு விளக்கம் அளித்துள்ளார்.

இந்த விளக்கத்தை அதிகாரிகள் கிராம மக்களிடம் தெரிவித்து அச்சப்பட வேண்டாம் என காவல்துறையினா் பொதுமக்களிடையே தெரிவித்து அச்சத்தை போக்கினா்.

இரண்டு ஹெலிகாப்டர்கள் தரையிறங்கிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

Similar News