ஆரணியில் காரில் எடுத்து சென்ற 4.14 கிலோ வெள்ளி பொருட்கள் பறிமுதல்
ஆரணியில் நகைக்கடை உரிமையாளர் காரில் எடுத்து சென்ற 4.14 கிலோ வெள்ளி பொருட்களை பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்
திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியில் நகராட்சித் தேர்தலையொட்டி 3 பறக்கும் படை குழுக்கள் அமைக்கப்பட்டு, 24 மணி நேரமும் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. மேலும், ஆரணி-தேவிகாபுரம் செல்லும் சாலையில் நேற்று இரவு தேர்தல் பறக்கும் படை அலுவலர், ஆரணி துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ரோஸ்முத்து தலைமையில் போலீசார் சரவணன் மற்றும் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது, ஆரணியில் இருந்து தேவிகாபுரம் நோக்கி சென்ற காரை மடக்கி சோதனை செய்ததில் உரிய ஆவணமின்றி வெள்ளி கால் கொலுசுகள், குங்கும சிமிழ், காப்பு என 4 லட்சம் மதிப்பிலான 4.14 கிலோ வெள்ளி பொருட்கள் எடுத்து சென்றது தெரியவந்தது. பறக்கும் படையினர் வெள்ளி பொருட்களை பறிமுதல் செய்தனர்.
தொடர்ந்து நடத்திய விசாரணையில், காரில் வந்தவர் ஆரணி டவுன், அருணகிரி தெருவை சேர்ந்த நகைக்கடை உரிமையாளர் ராஜேந்திரகுமார், என்பதும், ஆரணி அடுத்த தேவிகாபுரத்தில் நகை கடை வைத்து நடத்தி வரும் இவர் கடைக்கு விற்பனைக்காக வெள்ளிப்பொருட்கள் எடுத்து சென்றது தெரியவந்தது.
மேலும், ராஜேந்திரன் கொண்டுவந்த வெள்ளி பொருட்களுக்கு உரிய ஆவணம் இல்லாததால் பறக்கும் படையினர் அவற்றை பறிமுதல் செய்து நகராட்சி தேர்தல் நடத்தும் அலுவலர் தமிழ்செல்விடம் ஒப்படைத்தனர். தேர்தல் நடத்தும் அலுவலர் வெள்ளிப்பொருட்களுக்கு உரிய ஆவணங்களை கொண்டு வந்து காண்பித்துவிட்டு பொருட்களை திரும்ப பெற்று கொள்ளுமாறு ராஜேந்திரனிடம் தெரிவித்தார்.