ஒமிக்ரான்அறிகுறி இருந்த பெண்ணின் தந்தைக்கு கொரோனா
ஆரணி அருகே ஒமிக்ரான் அறிகுறி இருந்த பெண்ணின் தந்தைக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.;
காங்கோ நாட்டில் இருந்து திரும்பிய ஆரணி அருகே உள்ள பையூரை சேர்ந்த பெண்ணுக்கு ஒமிக்ரான் அறிகுறி தெரிந்தது. இதையடுத்து அவர் திருவண்ணாமலை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதைத்தொடர்ந்து அவரது உறவினர்களுக்கு நேற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
இதில் பெண்ணின் தந்தைக்கு கொரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து சுகாதாரத் துறையினர் அவரை திருவண்ணாமலை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் உள்ள சிறப்பு வார்டில் அனுமதித்தனர்.
இந்த நிலையில் ஆரணி வருவாய் கோட்டாட்சியர் கவிதா மேற்பார்வையில் வட்டாட்சியர் க.பெருமாள், ஆரணி ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கு.இந்திராணி, இல.சீனிவாசன், ஊராட்சி மன்ற தலைவர் ஏ.சரவணன் ஆகியோர் தலைமையில் எஸ்.வி. நகரம் ஆரம்ப சுகாதார நிலையத்தின் சார்பில் அவர்கள் வீட்டின் அருகில் வசிக்கும் பொதுமக்களுக்கும், அப்பகுதியில் உள்ள கடைக்காரர்களுக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
மேலும் அந்த பெண்ணின் வீட்டிற்கு பையூர் ஊராட்சி மன்றத்தின் சார்பாக அவரது வீட்டுக்கு தேவையான உணவு பொருட்கள் போன்றவைகளை பெற்றுத் தருவதற்காக 'பி.பி. கிட்' அணிந்த ஒரு நபர் நியமிக்கப்பட்டுள்ளார். தொடர்ந்து அப்பகுதியில் போலீஸ் பாதுகாப்புடன் கண்காணிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் ஆரணி நகராட்சி ஆணையாளர் பி.தமிழ்செல்வி செய்தியாளர்களிடம் கூறுகையில், ஆரணி நகர மக்கள் விழிப்புணர்வோடு இருக்க வேண்டும், சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும். பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் கண்டிப்பாக முகக் கவசம் அணிய வேண்டும். பையூர் பகுதியில் உள்ள ஒரு பெண்ணுக்கு ஒமிக்ரான் அறிகுறி இருப்பதால், அவரின் குடும்பத்தைச் சேர்ந்த மேலும் ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
எனவே நகர மக்கள் அனைவரும் கண்டிப்பாக விழிப்புடன் இருக்க வேண்டும். மேலும் ஆங்காங்கே தேங்கி உள்ள மழை நீரால் கொசு உற்பத்தி அதிகரித்துள்ளது. டெங்கு பரவாமல் இருக்க பொதுமக்கள் தண்ணீரை காய்ச்சி குடிக்க வேண்டும், கபசுர குடிநீர் குடிக்க வேண்டும். நோய் எதிர்ப்பு சக்தி கொண்ட உணவுகளை உட்கொள்ள வேண்டும். ஆரணி நகர பொதுமக்கள் அனைவரும் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும்.
கடைகள், அரசு அலுவலகங்களில் வேலை பார்க்கும் ஊழியர்கள் கொரோனா தடுப்பூசி போட்டிருக்க வேண்டும். நகராட்சி அலுவலர்கள் சோதனை நடத்த வரும்போது, அவர்களிடம் தடுப்பூசி போட்டதற்கான சான்றுகளை காண்பிக்க வேண்டும் என கூறினார்.