ஆரணி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

ஆரணி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட குழு சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.;

Update: 2022-03-16 13:40 GMT

ஆரணியில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட குழு சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட குழு சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. முன்னதாக அவர்கள் ஆரணி அண்ணா சிலை அருகில் இருந்து வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் வரை ஊர்வலமாக வந்தனர்.

ஆர்ப்பாட்டத்துக்கு வட்டாரச் செயலாளர் என். குமார் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் உயர் மின் கோபுரத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும். உயர் மின்னழுத்த கம்பிகள் செல்லும் பாதையில் மரங்கள், பம்புசெட், கிணறு, நிலத்துக்கான இழப்பீடு வழங்க வேண்டும், மேலும் வீடு, கட்டிடங்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். அந்த இழப்பீடு சந்தை மதிப்பை விட 10 மடங்கு உயர்த்தி வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.

கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை வருவாய் கோட்டாட்சியர் வெளியே வந்து வாங்க வேண்டும், எனக் கோஷமிட்டனர். உடனடியாக ஆரணி தாசில்தார் க. பெருமாள், வருவாய் கோட்டாட்சியரின் நேர்முக உதவியாளர் மூர்த்தி ஆகியோர் வெளியே வந்து ஆர்ப்பாட்டம் நடத்தியவரிடம் கோரிக்கை மனுக்களை பெற்றனர்.

இதையடுத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஒரு சில நிர்வாகிகளை அழைத்துச் சென்று வருவாய் கோட்டாட்சியரிடமும் கோரிக்கை மனுக்களை வழங்கினர். ஆர்ப்பாட்டத்தில் சி.ஐ.டி.யு. நிர்வாகிகள் சி.அப்பாசாமி, பெ.கண்ணன், உயர்மின் கோபுர விவசாயிகள் மாநில கன்வீனர் பி.பெருமாள், மாவட்ட செயலாளர் டி.கே. வெங்கடேசன் உள்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News