ஆரணியில் சிப்காட் விரிவாக்க பணியை கண்டித்து விவசாயிகள் பிச்சை எடுத்து போராட்டம்
ஆரணியில் சிப்காட் விரிவாக்க பணியை கண்டித்து விவசாயிகள் பிச்சை எடுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.;
தலையில் துண்டு கட்டி கையில் இலை ஏந்தி பிச்சை எடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்.
திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியில் விவசாயிகள் குறை தீர்வு கூட்டத்தை புறக்கணித்து மேல்மா சிப்காட் விவசாயிகள் தலையில் துண்டு கட்டி கையில் இலை ஏந்தி பிச்சை எடுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி வேளாண்மை துறை அலுவலக கூட்ட அரங்கில் விவசாயிகள் குறை தீர்வு கூட்டம் வருவாய் கோட்டாட்சியர் தனலட்சுமி தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்கத்தினர் செய்யாறு மேல்மா சிப்காட் விரிவாக்க பணிக்காக விவசாய நிலம் கையகப்படுத்துவதை கண்டித்து குறை தீர்வு கூட்டத்தை புறக்கணித்து தலையில் பச்சை தூண்டு அணிந்து கையில் இலை ஏந்தி பிச்சை எடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டு நிலம் கையகப்படுத்த எதிர்ப்பு தெரிவித்து முழக்கங்களை எழுப்பினர்.
இதனைத் தொடர்ந்து நடைபெற்ற விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில், கண்ணமங்கலம் பேரூராட்சி புதுப்பேட்டை பகுதியில் வசிக்கும் கூலி தொழிலாளி சரஸ்வதி என்பவருக்கு சொந்தமான இரண்டு கறவை மாடுகள் இடித்தாக்கி இறந்த சம்பவத்தில் பேரிடர் நிவாரண நிதியாக தலா முப்பதாயிரம் நிவாரணமாக கோட்டாட்சிய தனலட்சுமி பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கினார்.
மேலும் கனமழை காரணமாக சென்னத்தூர் கிராமத்தைச் சேர்ந்த பிச்சை என்பவரின் வீட்டின் மேற்கூரை மற்றும் பக்க சுவர் இடிந்து விழுந்தது. நிவாரணத் தொகையாக ரூபாய் 5000 வருவாய் கோட்டாட்சியர் வழங்கினார்.
இந்த குறை தீர்வு கூட்டத்தில் வட்டாட்சியர் மஞ்சுளா, நகராட்சி ஆணையர் குமரன், வட்ட வழங்கல் அலுவலர் வெங்கடேசன் மற்றும் வருவாய்த்துறையினர், வேளாண்மை துறை, தோட்டக்கலைத் துறை உள்ளிட்ட பல்வேறு துறை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
சேத்துப்பட்டில் விவசாயிகள் குறைதீர்வு கூட்டம்
திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு வேளாண்மை உதவி இயக்குனர் அலுவலகத்தில், விவசாயிகள் குறைதீர்வு கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்திற்கு, மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் ராமச்சந்திரன் தலைமை தாங்கினார். வேளாண்மை உதவி இயக்குனர், பெரணமல்லூர் கோவிந்தராஜ், தோட்டக்கலைத் துறை உதவி இயக்குனர் சிவகுமார், வேளாண்மை அலுவலர் முனியன், சேத்துப்பட்டு தாசில்தார் வெங்கடேசன், ஆணையாளர் செந்தில்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். உதவி வேளாண்மை அலுவலர் ராஜாராம் வரவேற்றார்.
இக்கூட்டத்தில் உதவி இயக்குனர் பேசுகையில்; தற்போது மழை பெய்துள்ளது. இதனை விவசாயிகள் நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். விவசாயிகளுக்கான இடுபொருள்கள், வேளாண்மை இயந்திரங்கள் ஆகியவற்றைப் பெறுவதற்கு, அனைவரும் உழவன் செயலியில் பதிவு செய்யுங்கள். இதனால், அரசு தரும் திட்டங்களைப் பெற முடியும் என வேளாண்மை உதவி இயக்குனர் கோவிந்தராஜ் தெரிவித்தார்.
இதேபோல், கங்காபுரம் பெரிய கொழப்பலூர் சாலை மிகவும் குண்டு குழியுமாக உள்ளது. பள்ளி மாணவர்கள், பொதுமக்கள் பயன்பாட்டிற்காக சாலையை சீரமைத்து தர வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்தார்.
இந்த குறை தீர்வு கூட்டத்தில் வேளாண்மை துறை, தோட்டக்கலைத் துறை உள்ளிட்ட பல்வேறு துறை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.