போலி நகை மோசடி: ஆரணி நகர கூட்டுறவு வங்கி நிர்வாகக் குழு கலைப்பு
போலி நகை மோசடியால் ஆரணி நகர கூட்டுறவு வங்கி நிர்வாகக் குழு கலைத்து பதிவாளர் உத்தரவிட்டுள்ளார்.;
பைல் படம்.
திருவண்ணாமலை மாவட்டம்,ஆரணி நகரக் கூட்டுறவு வங்கியில், போலியான நபர்களுடைய பெயர்களில், 8.4 கிலோ எடையிலான தங்க முலாம் பூசப்பட்ட கவரிங் நகைகளை அடமானம் வைத்து, 2.39 கோடி ரூபாய் மோசடி செய்யப்பட்டிருப்பது, கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 26-ம் தேதி கண்டுபிடிக்கப்பட்டது.
செய்யார் துணை பதிவாளர் கமலக்கண்ணன் சென்னையில் உள்ள வணிக குற்ற புலனாய்வு பிரிவில் அளித்த புகாரின் பேரில் ஆரணி நகர கூட்டுறவு வங்கியின் மேலாளர் லிங்கப்பா, காசாளர் ஜெகதீசன், கிளார்க் சரவணன், நகை மதிப்பீட்டாளர் மோகன் ஆகிய 4 பேர் சஸ்பெண்டு செய்யப்பட்டனர்.
மேலும் ஆரணி நகர வங்கியின் கூட்டுறவு நிர்வாக தலைவர் அ.தி.மு.க.வை சேர்ந்த நகர செயலாளர் அசோக்குமார் துணை தலைவர் ஏ.ஜி.ஆனந்த் ஆகிய 2 பேரிடம் கூட்டுறவு சங்க அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு கடந்த 11.03.22 அன்று நகர கூட்டுறவு வங்கி மேலாளர் லிங்கப்பா மற்றும் கூட்டுறவு சங்க தலைவர் அசோக்குமார் உள்ளிட்ட 4 பேரை வணிக குற்ற புலனாய்வு பிரிவு போலீசார் கைது செய்து வேலூர் ஜெயிலில் அடைத்தனர்.
இதனையடுத்து புதிய ஆரணி கூட்டுறவு வங்கி தலைவராக ஏ.ஜி.ஆனந்த் என்பவர் நியமிக்கபட்டார். இதனை தொடர்ந்து ஆரணி நகர கூட்டுறவு சங்கத்தில் கையாடல் மற்றும் ஊழல் செய்தது நிரூபணம் ஆனதால் ஆரணி கூட்டுறவு சங்க நிர்வாக குழுவை கலைத்து திருவண்ணாமலை மாவட்ட இணை பதிவாளர் நடராஜன் அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளார்.