ஆரணி அருகே அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்த முதியவர் பரிதாபமாக பலி

ஆரணி அருகே அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்த பசு மாட்டை மீட்க சென்ற முதியவரும் மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்தார்

Update: 2021-07-30 07:33 GMT

மாதிரிபடம்

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே உள்ள மலையம்பட்டை சேர்ந்தவர் பெருமாள் (70). விவசாயி. இவரது மனைவி தேவகி. இவர்களின் இரு மகள்களுக்கும் திருமணமாகி விட்டது. இதனால் தம்பதியினர் இருவரும் தனியே வசித்து வந்தனர்.

இன்று காலை பெருமாள், தனது பசு மாட்டை மேய்ச்சலுக்காக, அங்குள்ள ஏரிக்கு ஓட்டிச் சென்றார். அப்போது, அந்த வழியாக சென்ற உயர் அழுத்த மின்கம்பி, விவசாய நிலத்தில் அறுந்து கிடந்தது. அந்த வழியாக சென்ற பசுமாடு எதிர்பாராத விதமாக மின்கம்பியை மிதித்ததில் மின்சாரம் தாக்கி சரிந்து விழுந்தது.

இதனை கண்ட பெருமாள் மாட்டை மீட்க முயன்றபோது, அவர் மீதும் மின்சாரம் பாய்ந்தது. இதில் தூக்கிவீசப்பட்ட அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இதனை கண்ட அருகில் இருந்தவர்கள் உடனடியாக மின்சாரத்தை துண்டித்து, களம்பூர் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர். அதன் பேரில், போலீசார் பெருமாள் உடலை மீட்டு ஆரணி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து களம்பூர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

Similar News