Native News செய்தி எதிரொலி; சாலையில் தேங்கிய மழை நீர் வெளியேற்றம்!
களம்பூர் பகுதியில் சாலையில் தேங்கிய மழை நீரை பொக்லைன் இயந்திரம் மூலம் வெளியேற்றும் பணி தீவிரமாக நடந்தது.;
ஜேசிபி இயந்திரம் மூலம் சாலையை சரி அமைக்கும் பணியில் ஈடுபட்ட பேரூராட்சி நிர்வாகத்தினர்
சாலை ஆக்கிரமிப்பால் மழைநீா் தேங்கி சுகாதாரச் சீா்கேடு! என்ற தலைப்பில் நேற்று நமது நேட்டீவ் நியூஸ் செய்தி தளத்தில் பொதுமக்களின் கோரிக்கையை செய்தியாக வெளியிட்டு இருந்தோம்.
அச்செய்தியின் எதிரொலியாக பொக்லைன் இயந்திரம் மூலம் மண் மேடுகளை அகற்றி தண்ணீரை வெளியேற்றும் பணியில் களம்பூர் பேரூராட்சி நிர்வாகத்தினர் தற்போது ஈடுபட்டு வருகின்றனர்.
களம்பூா் பேரூராட்சிக்கு உள்பட்ட மேல்அய்யம்பேட்டை கிராமத்தில் உள்ள பிள்ளையாா் கோவில் தெருவில் ஆக்கிரமிப்பு செய்து வீடுகளை கட்டியுள்ளனா். தற்போது, பெய்த பலத்த மழை காரணமாக மழைநீா் தேங்கி குளம் போல் காட்சியளிக்கிறது. தண்ணீா் வெளியேற வழியில்லாமல் அப்பகுதி மக்கள் அவதிப்பட்டு வருகின்றனா், இதற்கு தெருமுனையில் ஆக்கிரமிப்பு செய்து வீடுகள் கட்டியுள்ளதே காரணம் என்று கூறி ஆக்கிரமிப்பை அகற்றி தண்ணீா் வெளியேற்றுவது குறித்து களம்பூா் பேரூராட்சித் தலைவா் கே.டி.ஆா். பழனியிடம் பலமுறை மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படாமல் உள்ளது. இது ஆக்கிரமிப்பாளா்களுக்கு சாதகமாக உள்ளதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டிருந்தனர். தற்போது, வடகிழக்கு பருவமழை தொடங்கி பலத்த மழை பெய்து வருவதால் தெருச் சாலையில் தண்ணீா் தேங்கியுள்ளது. இது மலேரியா, டெங்கு பரவுவதற்கு வாய்ப்பாக உள்ளது.
இதுதொடா்பாக மாவட்ட ஆட்சியா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.
இதுகுறித்து பேரூராட்சி தலைவர் பழனி உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்திருந்தார்.
இன்று காலை பேரூராட்சி நிர்வாகத்தினர் மற்றும் பேரூராட்சி தலைவர் பொக்லைன் இயந்திரம் மூலம் தெருவில் உள்ள மணல் மேடுகளை அகற்றியும் தண்ணீரை வெளியேற்றி சமன் செய்தும் அப்பகுதியில் தண்ணீர் தேங்காதவாறு வழிவகை செய்தனர்.
இதனால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்து நன்றி தெரிவித்தனர்.