ஆரணி தொகுதியில் திமுக வேட்பாளர் 2 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி

ஆரணி தொகுதி திமுக வேட்பாளர் 2 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

Update: 2024-06-05 02:48 GMT

ஆரணி நாடாளுமன்ற தொகுதியில் வெற்றி பெற்ற திமுக வேட்பாளர் தரணி வேந்தன்.

ஆரணி தொகுதி திமுக வேட்பாளர் 2 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் திருவண்ணாமலை, ஆரணி என இரண்டு நாடாளுமன்ற தொகுதிகள் உள்ளன.

ஆரணி மக்களவைத் தொகுதியில் போளூர், ஆரணி, செய்யாறு, வந்தவாசி, செஞ்சி, மயிலம் சட்டமன்றத் தொகுதிகள் அடங்கியுள்ளன. இதில் செஞ்சி, மயிலம் விழுப்புரம் மாவட்டத்தில் அமைந்துள்ளது.

ஆரணி தொகுதியில் எம்.எஸ்.தரணிவேந்தன்(திமுக). ஜி.வி.கஜேந்திரன்(அதிமுக), ஏ.கணேஷ்குமார்(பாமக), நாம் தமிழா் கட்சி சாா்பில் பாக்கியலட்சுமி ஆகியோா் போட்டியிட்டனா். இவா்கள் தவிர சுயேச்சைகள் மற்றும் பிற கட்சிகளைச் சோ்ந்த 25 போ் என மொத்தம் 29 போ் போட்டியிட்டனா்.

ஆரணி நாடாளுமன்ற தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கை மையம் திருவண்ணாமலை நகரம் செங்கம் சாலை சண்முகா தொழிற்சாலை அரசினர் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் வாக்கு எண்ணிக்கை மேற்பாா்வையாளா் சுஷாந்த் கௌரவ், தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா் பிரியதா்ஷினி ஆகியோா் அனைத்துக் கட்சி முகவா்கள் முன்னிலையில் வாக்கு இயந்திரங்களின் சீல் உடைத்து காலை 8 மணியளவில் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.

ஆரணி மக்களவைத் தொகுதியின் மொத்த வாக்காளா் எண்ணிக்கை 14 லட்சத்து 96 ஆயிரத்து 118 ஆகும். இதில் பதிவான வாக்குகள் 11லட்சத்து 33ஆயிரத்து 193 வாக்குகள் ஆகும் . 

இறுதிச்சுற்று வாக்கு எண்ணிக்கையின் முடிவில் திமுக வேட்பாளா் எம்.எஸ். தரணிவேந்தன் 4,96,260 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றாா். அதிமுக வேட்பாளா் ஜி.வி.கஜேந்திரன் 2,89,033 வாக்குகளும், பாமக வேட்பாளா் அ. கணேஷ்குமார் 2,33,930 வாக்குகளும், நாம் தமிழா் கட்சி வேட்பாளா் கு.பாக்கியலட்சுமி 65,964 வாக்குகளும் பெற்றனா்.

ஆரணி நாடாளுமன்ற தொகுதியில் வெற்றி பெற்ற திமுக வேட்பாளர் தரணி வேந்தனுக்கு, சான்றிதழை ஆரணி நாடாளுமன்ற தேர்தல் அலுவலர், திருவண்ணாமலை மாவட்ட வருவாய் அலுவலருமான பிரியதர்ஷினி வழங்கினார்.

ஆரணி நாடாளுமன்ற தொகுதியில் திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பில் வெற்றி பெற்ற திருவண்ணாமலை வடக்கு மாவட்ட திமுக செயலாளர் தரணி வேந்தன் அவர்களுக்கு அமைச்சர்கள் எ.வ.வேலு, மஸ்தான், துணை சபாநாயகர் பிச்சாண்டி, சட்டமன்ற உறுப்பினர்கள் கிரி , அம்பேத்குமார், ஜோதி , சரவணன், மாநில மருத்துவர் அணி துணைத்தலைவர் எ.வ.வே.கம்பன் ஆகியோர் பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.

Tags:    

Similar News