ஆரணி ஊராட்சி ஒன்றியங்களில் வளர்ச்சி திட்ட பணிகளை மாவட்ட ஆட்சியர் ஆய்வு

ஆரணி மேற்கு ஆரணி ஊராட்சி ஒன்றியங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி பணிகளை ஆட்சியர் முருகேஷ் பார்வையிட்டார்

Update: 2022-05-14 01:07 GMT

மேற்கு ஆரணி ஊராட்சி ஒன்றியத்தில் அமைந்துள்ள சமத்துவபுரத்தில் பழங்குடியினருக்கு அரசு வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் கட்டப்பட்டு வரும் வீடுகளை மாவட்ட ஆட்சியர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்

மேற்கு ஆரணி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு புதிதாக மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை சார்பில் ரூ.2 கோடியே 88 லட்சத்து 60 ஆயிரம் மதிப்பில் புதிய கட்டிடத்தை மாவட்ட ஆட்சியர் பா.முருகேஷ் பார்வையிட்டு ஆய்வு செய்தார். 

தொடர்ந்து சிமெண்டு கிடங்கில் இருப்புகள் வினியோக செயல்பாடுகள் குறித்த கோப்புகள் முறையாக பராமரிக்கப் படுகிறதா என்றும் அலுவலரிடம் கேட்டறிந்தார்.  மேலும் மேற்கு ஆரணி வட்டார வேளாண்மை விரிவாக்க திட்டத்தின் இடுபொருட்கள் வைப்பு கிடங்கில் மணிலா, விதைநெல் ஆகியவற்றின் இருப்பு குறித்தும் தகவல்களை கேட்டறிந்தார்.

அதன்பின் மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதியளிப்பு திட்டத்தின் கீழ் (2021 -22) ரூ.50 ஆயிரம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள மேற்கூரை, மழைநீர் சேகரித்தல் தொட்ட, பாரத பிரதமர் கிராம சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 2 கோடியே 68 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள கண்ணமங்கலம்- ஆரணி சாலை முதல் அக்ரா பாளையம் எஸ்.யூ.வனம் சாலை இணைப்பையும் பார்வையிட்டார்.

அதனைத்தொடர்ந்து தச்சூர் கிராமத்தில் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் சமத்துவபுரத்தில் தலா ரூபாய் 3 லட்சம் வீதம் 3 கோடியே 52 லட்சம் மதிப்பில் புதிதாக கட்டப்பட்டு வரும் 119 பழங்குடியினருக்கான வீடுகளையும் பார்வையிட்டு பணிகளை விரைந்து முடிக்க அங்கு பணி ஒப்பந்ததாரர்களுக்கு அறிவுறுத்தினார். மேலும் அங்குள்ள அங்கன்வாடி மையம், சிறுவர் விளையாட்டுப் பூங்கா, சமுதாயக்கூடம், நீர்த்தேக்கத் தொட்டி, பெரியார் சிலை, பெரியார் நினைவு சமத்துவபுரம் நுழைவுவாயில் போன்ற புதுப்பிக்கும் பணிகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

அவருடன் கூடுதல் ஆட்சியர் வளர்ச்சி எம்.பிரதாப், நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் முரளி, நேர்முக உதவியாளர் (வேளாண்மை) சத்தியமூர்த்தி, வேளாண்மை உதவி இயக்குனர்கள் ஏழுமலை, குணசேகரன், ஊராட்சி உதவி இயக்குனர் சுரேஷ் குமார், ஆரணி வருவாய் கோட்டாட்சியர் கவிதா, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் இந்திராணி, திலகவதி, சீனிவாசன், விவேகானந்தன், தாசில்தார் க.பெருமாள், ஒன்றியக்குழு தலைவர்கள் பச்சையம்மாள் சீனிவாசன், கனிமொழி சுந்தர், ஆரணி நகர சபை தலைவர் ஏ.சி. மணி, தச்சூர் ஊராட்சி மன்றத் தலைவர் வடிவேல், ஒன்றிய பொறியாளர்கள், பணி மேற்பார்வையாளர்கள், அரசு அலுவலர்கள் பலரும் இருந்தனர்.

Tags:    

Similar News