உண்டியல் காணிக்கையை எண்ணவிடாமல் தடுத்த பக்தர்கள்
பழம்பேட்டை முத்துமாரியம்மன் கோவிலில் கும்பாபிஷேகம் நடத்த வேண்டும் என உண்டியல் காணிக்கையை எண்ணவிடாமல் தடுத்த பக்தர்கள்.
திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு பேரூராட்சியில் இந்துசமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் பழமை வாய்ந்த பழம்பேட்டை முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் கும்பாபிஷேகம் 12 வருடங்களுக்கு முன்பு நடைபெற்றது. இதனால் கும்பாபிஷேகம் நடத்த வேண்டும் என்று பக்தர்களும், விழாக்குழுவினரும் கோரிக்கை வைத்து வந்தனர்.
ஆனால் இதுவரை கும்பாபிஷேகம் நடத்தவில்லை. இந்நிலையில் கோவிலில் உண்டியல் காணிக்கை எண்ணுவதற்காக அதிகாரிகள் வந்திருந்தனர். அவர்கள் முன்னிலையில் உண்டியல் சீல் அகற்றப்பட்டு காணிக்கை பணத்தை எண்ணத் தொடங்கினர்.
இதுபற்றி தகவல் அறிந்ததும் விழாக் குழுவினர் மற்றும் பக்தர்கள் சென்று கோவிலுக்கு கும்பாபிஷேகம் நடத்தவேண்டும். அதனால் உண்டியல் காணிக்கையை எடுத்து செல்லக்கூடாது. உண்டியல் காணிக்கை பணத்தை மீண்டும் உண்டியலில் செலுத்தி சீல் வைக்க வேண்டும் என்று கூறினார்கள். இதனால் அறநிலையத் துறை அதிகாரிகள் உண்டியல் பணத்தை எண்ணாமல், உண்டியலை மீண்டும் கோவிலுக்குள் கொண்டு வைத்து விட்டு திரும்பி சென்றனர்.