ஆரணி சூரியகுளத்தில் செத்து மிதக்கும் மீன்கள்: நோய் பரவும் அபாயம்
ஆரணி சூரியகுளத்தில் செத்து மிதந்த மீன்களால் துர்நாற்றம் வீசுவதால் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.;
ஆரணி சூரியகுளத்தில் செத்து மிதந்த மீன்களால் துர்நாற்றம் வீசுவதால் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
ஆரணி டவுன் மையப்பகுதியில் சுமார் 5 ஏக்கர் பரப்பளவில் சூரியகுளம் உள்ளது. இந்த பகுதியின் நீர்பிடிப்பு ஆதாரமாக விளங்கி வருகிறது. இந்த குளத்து தண்ணீரை பல ஆண்டுக்கு முன்பு குடிநீராக பொதுமக்கள் பயன்படுத்தி வந்தனர். மேலும் திருமலை சமுத்திர ஏரியிலிருந்து சுத்திகரிப்பு செய்த பின்னர் சூரியகுளத்திற்கு மழைநீர் வருவது வழக்கம்.
ஆனால் தற்போது சூரியகுளம் அருகில் ஆக்கிரமிப்பு அதிகளவில் உள்ளதால் கால்வாய்கள் அடைக்கப்பட்டு குடியிருப்பு பகுதிகளாக மாறியுள்ளன. ரூ.6 கோடி மதிப்பீட்டில் சூரியகுளம் சீரமைக்கும் பணி நடைபெற்று பாதியளவில் பணிகள் முடங்கியது.
கடந்த 3 மாதத்திற்கு முன்பு பெய்த கனமழையால் திருமலை சமுத்திர ஏரியிலிருந்து மழைநீர் சூரியகுளத்திற்கு வந்தன. இந்நிலையில் சூரியகுளத்தில் கழிவு நீர், கோழி இறைச்சிகள் ஆகியவற்றை கொட்டுவதால் சூரியகுளம் மாசுபட்டு குளத்தில் உள்ள ஏராளமான மீன்கள் இறந்து மிதக்கிறது.
செத்து மிதக்கும் மீன்களால் சூரியகுளத்தில் சுற்றியுள்ள குடியிருப்பு பகுதியில் துர்நாற்றம் வீசுவதால் நோய் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக குடியிருப்பு வாசிகள் குற்றச்சாட்டுகின்றனர். நகராட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு சூரியகுளத்தை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.