ஆரணி அருகே அடுப்பு பற்ற வைத்த போது சிலிண்டர் வெடித்து விபத்து
ஆரணி அருகே சமையல் செய்ய அடுப்பை பற்ற வைத்த போது சிலிண்டர் வெடித்து விபத்துக்கு உள்ளானது.;
திருவண்ணாமலை மாவட்டம்,ஆரணி அடுத்த தசரா பேட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் பட்டாபி நெசவு தொழிலாளி. இவருடைய மனைவி லலிதா. இவர்கள் ஓட்டு வீட்டில் தனியாக வசித்து வந்தனர்.
இன்று காலை வீட்டில் சமையல் செய்வதற்காக அடுப்பை பற்ற வைக்கும்போது சிலிண்டர் திடீரென வெடித்தது. இந்த விபத்தில் வீட்டின் மேற்கூறையில் இருந்த ஓடுகள் தரைமட்டமானது. வீட்டிலிருந்த பட்டாபி , லலிதா ஆகிய இருவரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
இது குறித்து தகவல் அறிந்து வந்த ஆரணி தீயணைப்பு நிலைய வீரர்கள் தீ மேலும் பரவாமல் தண்ணீரை பீச்சி அடித்து தீயை அணைத்தனர்.
விபத்து நடந்த இடத்திற்கு வந்த வட்டாட்சியர் பெருமாள், வருவாய் ஆய்வாளர் விஜயா, கிராம நிர்வாக அலுவலர் தமிழரசன் ஆகியோர் தீ விபத்தினால் ஏற்பட்ட பாதிப்புகளை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
இந்த தீ விபத்தினால் சுமார் ரூ. 2 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமாகின. மேலும் வருவாய் துறை சார்பாக அரிசி, சேலை, வேட்டி, மண்ணெண்ணெய், நிவாரண உதவியாக ரூ 5,000 ஆகியவற்றை வழங்கினர்.