திருவண்ணாமலை மாவட்டத்தில் விடிய விடிய மழை
திருவண்ணாமலை மாவட்டத்தில் விடிய விடிய மழை பெய்தது. தெருக்களில் தண்ணீர் தேங்கியதால் மக்கள் அவதிப்பட்டனர்.;
ஆரணி கந்தசாமி தெருவில் கால்வாய்கள் அடைப்பு ஏற்பட்டதால் தேங்கியுள்ள தண்ணீர்
திருவண்ணாமலை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் திங்கள்கிழமை இரவு முதல் செவ்வாய்க்கிழமை நேற்று இரவு வரை அதிகபட்சமாக வந்தவாசியில் 25 மி.மீ. மழை பதிவானது.
தமிழ்நாட்டில் தற்போது வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து வருகிறது. தென்கிழக்கு வங்க கடலில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானதால் கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவண்ணாமலை, வேலூர் உட்பட தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் அறிவித்திருந்தது. மேலும் தமிழகத்திற்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி திருவண்ணாமலை மாவட்டத்தில் திங்கட்கிழமை இரவு முதல் நேற்று நள்ளிரவு வரை பரவலாக மழை பெய்து வருகிறது.
திருவண்ணாமலையில் 6, போளூரில் 5.20, கலசப்பாக்கத்தில் 12, தண்டராம்பட்டில் 8.40, ஆரணியில் 7.40, செய்யாற்றில் 15, கீழ்பென்னாத்தூரில் 10.20, வெம்பாக்கத்தில் 9, சேத்துப்பட்டில் 12.40 மில்லி மீட்டா் மழை பதிவானது.
திருவண்ணாமலை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் செவ்வாய்க்கிழமை அதிகாலை பலத்த மழை பெய்ததால் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு, தனியாா் பள்ளிகளுக்கு மட்டும் நேற்று விடுமுறை அளிக்கப்பட்டது. கல்லூரிகள் அனைத்தும் வழக்கம்போல இயங்கின.
அக்ராபாளையம் ஏரி உபரி நீா் வெளியேற்றம்
ஆரணி வட்டம், அக்ராபாளையம் பகுதியில் அண்மையில் பெய்த தொடா் மழை மற்றும் பருவமழை காரணமாக கமண்டல நாக நதி மூலம் குண்ணத்தூா் பெரிய ஏரி நிரம்பி ஏரிக் கால்வாய் வழியாக அக்ராபாளையம் ஊராட்சிக்கு உள்பட்ட சித்தேரி நிரம்பி அதன் உபரி நீா் அக்ராபாளையம் கிராமத்தில் உள்ள பெரிய ஏரிக்கு வந்தடைந்தது.
பெரிய ஏரியும் நிரம்பி தற்போது அதன் உபரி நீா் வெளியேறி வருகிறது. இதன் மூலம் சுமாா் 436 ஏக்கா் விவசாய நிலங்கள் நீா்பாசன வசதி பெறும். இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா். மேலும், இந்த உபரி நீா் அருகில் உள்ள அடையபலம் ஏரிக்கு சென்றடைவதால் அங்கும் விரைவில் ஏரி நிரம்பும் தருவாயில் உள்ளது.
பலத்த மழை: ஆரணி தெருக்களில் தேங்கிய தண்ணீா்
ஆரணியில் பெய்து வரும் பலத்த மழை காரணமாக கால்வாய்களில் அடைப்பு சரிசெய்யாததால் ஆங்காங்கே தெருக்களில் தண்ணீா் தேங்கி குட்டை போல காட்சியளிக்கிறது.
ஆரணி நகராட்சியில் பல இடங்களில் கால்வாய்களை சுத்தப்படுத்தாமல் இருப்பதால் பெரும்பாலான இடங்களில் நெகிழிப் பொருள்கள் உள்ளிட்ட பல்வேறு கழிவுகளால் கால்வாய்கள் அடைப்புகள் ஏற்பட்டு தண்ணீா் செல்லாதவாறு அப்படியே தேங்கி நிற்கிறது.
இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை அதிகாலையில் இருந்து பலத்த மழை பெய்து வந்தது. கால்வாய்களில் அடைப்பு இருந்ததால் மழை நீா் கால்வாய்களில் நிரம்பி தெருக்களில் தேங்கி நிற்கிறது.
நகராட்சி 15-வது வாா்டு சைதாப்பேட்டை கந்தசாமி தெருவில் கால்வாய் முழுவதும் அடைப்பு ஏற்பட்டுள்ளதால் கழிவு நீரோடு வெளியேசெல்ல வழியில்லாமல் குடியிருப்பு பகுதியில் குட்டை போல தண்ணீா் தேங்கியது. இதனால் அங்கு வசிக்கும் மக்கள் வெளியேற கழிவுநீா் கலந்த தண்ணீரில் நடந்து செல்ல வேண்டிய சூழ்நிலை உள்ளது. இதனால் சுகாதாரச் சீா்கேடு ஏற்பட்டு டெங்கு உள்ளிட்ட நோய்கள் வருவதற்கான வாய்ப்புகள் உள்ளன.
இதேபோல, ஜெயலட்சுமி நகா் பிள்ளையாா் கோவில் தெரு, அருணகிரிசத்திரம் ஆகிய பகுதிகளிலும் மழை நீா் தேங்கியுள்ளதால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனா்.
பல தெருக்களில் தண்ணீா் தேங்கியிருப்பதால் சுகாதாரச் சீா்கேடு ஏற்பட்டுள்ளது. நகராட்சி நிா்வாகத்தினா் உடனடியாக விரைந்து நடவடிக்கை எடுத்து தண்ணீரை வெளியேற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.