வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண் இணைப்பது குறித்து ஆலோசனை கூட்டம்
ஆரணி தாலுகா அலுவலகத்தில் வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண் இணைப்பது குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.;
ஆரணி தாலுகா அலுவலகத்தில் ஆரணி, போளூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அனைத்து அரசியல் கட்சி பிரமுகர்களுடன் இந்திய தேர்தல் ஆணைய உத்தரவின்படி அனைத்து வாக்காளர் அடையாள அட்டையுடன், ஆதார் எண் இணைப்பது சம்பந்தமாக விழிப்புணர்வு ஆலோசனை கூட்டம் நடந்தது.
தாசில்தார் பெருமாள் தலைமை தாங்கினார். தேர்தல் உதவி அலுவலர் ரவிச்சந்திரன் வரவேற்றார். கூட்டத்தில் தாசில்தார் பேசுகையில் இப்பணி நாளை (திங்கட்கிழமை) முதல் தொடங்கப்பட உள்ளது. இ-சேவை மையங்கள் மூலமாகவும், சம்பந்தப்பட்ட தாலுகா அலுவலகங்களிலும், வாக்காளர்கள் தங்கள் ஆதார் எண் விவரங்களை அளிக்கலாம் என்றார்.
கூட்டத்தில் தி.மு.க. ஒன்றிய செயலாளர்கள் எஸ்.எஸ்.அன்பழகன், வக்கீல் எம்.சுந்தர், களம்பூர் பேரூராட்சி தலைவர் பழனி, அ.தி.மு.க. நகர செயலாளர் அசோக்குமார், காங்கிரஸ் கட்சி நகர தலைவர் ஜெயவேல், கம்யூனிஸ்டு கட்சி நிர்வாகிகள் அப்பாசாமி, கண்ணன், பா.ஜ.க., பா.ம.க., விடுதலை சிறுத்தைகள் கட்சி, புரட்சி பாரதம், உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர். முடிவில் நகராட்சி தேர்தல் அலுவலர் குமார் நன்றி கூறினார்.