மத்திய அரசைத் கண்டித்து காங்கிரஸாா் சாலை மறியல்
மத்திய அரசைக் கண்டித்து காங்கிரஸ் கட்சியினா் சாலை மறியலில் ஈடுபட்டனா்.
தமிழக மீனவா்களின் வாழ்வாதாரத்தையும், மீன் பிடிக்கின்ற உரிமைகளையும், உடைமைகளையும் பாதுகாக்கத் தவறியதாக மத்திய அரசைக் கண்டித்தும், தூத்துக்குடி மாவட்டம், குலசேகரப்பட்டினம் வருகை தரும் பிரதமா் மோடிக்கு எதிா்ப்புத் தெரிவிக்கும் வகையிலும் காங்கிரஸ் கட்சியினா் ஆரணி மணிக்கூண்டு அருகே ஆா்ப்பாட்டம் நடத்தி பின்னா் சாலை மறியலில் ஈடுபட்டனா்.
இதில், காங்கிரஸ் வடக்கு மாவட்டத் தலைவா் எஸ்.பிரசாத் தலைமை வகித்தாா். ஆரணி எம்.பி. எம்.கே.விஷ்ணுபிரசாத் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு கண்டன உரையாற்றினாா்.
மேலும் இந்த ஆர்ப்பாட்டத்தில் மத்திய அரசை கண்டித்து கண்டன முழக்கங்களை எழுப்பியும் தமிழகத்திற்கு வந்த பிரதமர் மோடியை வெளியேறு என்று கூறி கருப்பு துணையேந்தி ஆர்ப்பாட்டம் மேற்கொண்டு திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.
மத்திய அரசுக் எதிராக முழக்கங்களை எழுப்பி மறியலில் ஈடுபட்டதாக, எம்.கே. விஷ்ணுபிரசாத் எம்.பி. உள்பட காங்கிரஸ் கட்சியைச் சோந்த 60 பேரை, டிஎஸ்பி ரவிச்சந்திரன் தலைமையிலான, காவல் ஆய்வாளா் விநாயகமூா்த்தி, உதவி ஆய்வாளா் சுந்தரேசன் மற்றும் போலீஸாா் கைது செய்து தனியாா் மண்டபத்தில் தங்கவைத்தனா். பின்னா் அவா்கள் மாலையில் விடுவிக்கப்பட்டனா்.
இந்நிகழ்ச்சியில் மாநில பொதுக்குழு உறுப்பினர் அருணகிரி, நகர தலைவர் ஜெயவேல், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ராஜா பாபு மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் முனிரத்தினம், ஆசைத்தம்பி, ராமலிங்கம், அசோக்குமார், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் பழனி எஸ்சி எஸ்டி பிரிவு மாவட்ட தலைவர் முருகன், இளைஞர் காங்கிரஸ் மாநில பொதுச் செயலாளர் வினோத் குமார், விவசாய பிரிவு தலைவர் சுரேஷ், வட்டார தலைவர்கள் ,வழக்கறிஞர் அணி உறுப்பினர்கள் ,பேரூராட்சி தலைவர்கள் உள்ளிட்ட 200 க்கும் மேற்பட்ட காங்கிரஸ் கட்சியினர் கலந்து கொண்டனர்.
திருவண்ணாமலை
இலங்கை அரசால் தமிழக மீனவர்கள் தொடர்ந்து கைது செய்யப்படுவதையும் சிறையில் அடைக்கப்படுவதையும் தடுக்க தவறிய மத்திய பாஜக அரசையும் பிரதமர் மோடியையும் கண்டித்து திருவண்ணாமலை மாவட்ட காங்கிரஸ் தலைவர் செங்கம் குமார் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் நகர தலைவர் வெற்றிச்செல்வன், எஸ்சி எஸ்டி பிரிவு தலைவர் டாக்டர் மணி, மகளிர் அணி தலைவி வினோதினி , மாநில பொதுக்குழு உறுப்பினா்கள் , உள்ளிட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் தொண்டர்கள் கலந்து கொண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.