அரசுப் பேருந்தை சிறைபிடித்து மாணவர்கள் போராட்டம்
ஆரணி அருகே கூடுதல் பேருந்து வசதி கோரி கல்லூரி மாணவர்கள் அரசு பேருந்தை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்
ஆரணியில் இருந்து காலை 8 மணியளவில் செல்லும் அரசு பேருந்தில் அதிக அளவில் மாணவர்கள் பயணிப்பதால் படிக்கட்டில் தொங்கும் நிலை ஏற்பட்டுள்ளது, இதனால் பேருந்து ஓட்டுநருக்கும் மாணவர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்படுகிறது.
இந்நிலையில் ஆரணி அடுத்த இரும்பேடு என்ற இடத்தில் அரசுப் பேருந்தை கல்லூரி மாணவர்கள் சிறைபிடித்து கூடுதலாக அரசு பேருந்து இயக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.
தகவலறிந்த ஆரணி கிராமிய காவல் ஆய்வாளர் முத்துக்குமார் சம்பவ இடத்துக்கு சென்று கல்லூரி மாணவர்களை சமரசம் செய்தார். மேலும் போக்குவரத்து கழக அதிகாரியைத் தொடர்பு கொண்டு கூடுதல் பேருந்து இயக்குவது குறித்து கேட்டறிந்தார்.
பின்னர் கல்லூரி முதல்வர் கூடுதல் பேருந்து வசதி கோரி அரசு போக்குவரத்துக்கழக ஆரணி பணிமனைக்கு கடிதம் அளிக்க வேண்டும் என்று அதிகாரி கூறியதையடுத்து மாணவர்கள் போராட்டத்தைக் கைவிட்டு கல்லூரிக்கு சென்றனர்.
இதனால் அந்த பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.