ஏரிக்கரையில் கொட்டப்படும் குப்பையால் பொதுமக்கள் அவதி
ஆரணியில் ஏரிக்கரையில் குப்பைகளை கொட்டுவதால் தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதால், பொதுமக்கள் அவதிப்படுகின்றனர்.
ஆரணி டவுன் நகராட்சிக்குட்பட்ட பகுதியிலுள்ள 33 வார்டுகளில் சேகரிக்கப்பட்ட குப்பைகளை சாலையோர ஏரிக்கரை ஓரத்தில் கொட்டி எரித்து வருவதால் துர்நாற்றத்தோடு தொற்றுநோய் பரவும் சூழ்நிலையில் பொது மக்கள் பெரிதும் அவதியடைந்து வருகிறார்கள்.
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி டவுன் நகராட்சிக்குட்பட்ட பகுதியில் 33 வார்டுகள் உள்ளன. அந்த 33 வார்டுகளில் சேகரிக்கப்பட்ட குப்பைகளை ஆரணி டவுன் புறவழி சாலை ஓரங்களிலும், மற்றும் கொசப் பாளையம் ஏரிக்கரையின் ஓரத்தில் குப்பைகளை கொட்டியும், கொட்டப்பட்ட குப்பைகளை தீ வைத்துக் கொளுத்தியும் வருவதால் அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசத் தொடங்கியுள்ளது.
அப்பகுதிகளில் துர்நாற்றம் வீசி வருவதைத் தொடர்ந்து கொசு, ஈக்கள், உள்ளிட்ட விஷ பூச்சிகளால் தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளதால் அப்பகுதியில் குடியிருக்கும் குடியிருப்பு வாசிகள் எந்த நேரத்தில் எந்தவிதமான தொற்றுநோய் பரவும் அபாயம் இருந்து வருவதால் இது குறித்து அச்சத்தில் இருந்து வருகின்றனர்,
இது குறித்து அப்பகுதி மக்கள் நகராட்சி அதிகாரிகளிடம் புகார் தெரிவித்த போது, ஆரணி நகராட்சியில் உள்ள மக்கும் மக்காத குப்பைகளை பிரித்தெடுக்கும் இயந்திரம் பழுதடைந்துள்ளது. அது சீரமைத்த பிறகு அங்குள்ள குப்பைகள் உடனடியாக அகற்றப்படும் என நகராட்சி ஊழியர்கள் தெரிவித்ததாக பொதுமக்கள் கூறுகின்றனர்.
நகராட்சி அலுவலகத்திலுள்ள பழுதடைந்த மக்கும், மக்கா, குப்பை இயந்திரத்தை உடனடியாக சீரமைத்து, 33 வார்டு பகுதிகளில் சேகரிக்கப்படும் குப்பைகளை மக்கும் மக்கா குப்பைகள் என பிரித்தெடுக்கும் இயந்திரத்தின் மூலமாக மறுசுழற்சியின் மூலமாக விவசாய உரங்கள் தயாரிக்கலாம்.
அதற்கு ஏதுவாக இருப்பதால், உடனடியாக மக்கும், மக்கா குப்பைகளை பிரித்து எடுக்கும் இயந்திரத்தை சீரமைத்து சாலை ஓரங்களில் கொட்டி வரும் குப்பைகளுக்கு தீர்வு காணப்படும் என்பதால் குப்பைகளை பிரித்து எடுக்கும் இயந்திரத்தை உடனடியாக சீரமைக்க வேண்டும் என ஆரணி டவுன் பகுதி பொது மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் ஆரணி நகராட்சி நிர்வாகத்திற்கு வேண்டுகோள் விடுத்து வருகின்றனர்.