ஆரணிக்கு காவிரி கூட்டுக் குடிநீர் திட்டம்: தொடங்கி வைத்தார் அமைச்சர் வேலு

ஆரணி பகுதிக்கு காவிரி கூட்டு குடிநீர் திட்டத்தை அமைச்சர் எ.வ.வேலுதொடங்கி வைத்தார்.

Update: 2022-05-23 01:14 GMT

ஆரணி நகராட்சி சார்பில் கட்டப்பட்டுள்ள நவீன உடற்பயிற்சி கூடத்தை  பொதுப்பணித்துறை அமைச்சர் திறந்து வைத்தார்

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி நகர மக்களுக்கு ரூபாய் 2 கோடி மதிப்பீட்டில் வேலூர் கூட்டுக் குடிநீர் திட்டத்தில் இருந்து காவிரி நீர் நாள் ஒன்றுக்கு 20 லட்சம் லிட்டர் குடிநீர் கூடுதலாக வழங்கும் திட்டத் தொடக்க விழா நேற்று நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியர் முருகேஷ் தலைமை வகித்தார்.  நகரமன்றத் தலைவர் மணி வரவேற்றார். விழாவில் சிறப்பு விருந்தினராக பொதுப்பணித்துறை அமைச்சர் எ வ.வேலு  பங்கேற்று, தண்ணீர் வரத்தை தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார்.

அப்போது அவர் கூறியதாவது: 

10 ஆண்டுகளுக்கு முன்பு திமுக ஆட்சியில் இருந்தபோது வேலூர் மாவட்டத்துக்கு வேலூர் கூட்டுக் குடிநீர் திட்டம் தொடங்கப்பட்டது. அதிலிருந்து ஆரணிக்கு தண்ணீர் தேவை என்று அப்போதைய தொகுதி எம்எல்ஏ சிவானந்தம் கோரிக்கை வைத்ததன் பேரில் இந்த திட்டம் வகுக்கப்பட்டது. மீண்டும் திமுக ஆட்சிக்கு வந்தவுடன் தற்போது இந்த திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.  இத்திட்டத்தால் 65 லட்சம் லிட்டர் தண்ணீர் தினமும் கிடைக்கும். மேலும் திருவண்ணாமலை கூட்டு குடிநீர் திட்டம் ரூபாய் 5000 கோடியில் கொண்டுவரப்பட உள்ளது எனக் கூறினார்.

பின்னர் நகராட்சி வளாகம் அருகே ரூபாய் 50 லட்சத்தில் புதியதாக கட்டப்பட்ட உடற்பயிற்சிக் கூடத்தை அமைச்சர் திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் ஆரணி நாடாளுமன்ற உறுப்பினர் விஷ்ணு பிரசாத் , மாநில தடகளச் சங்க துணைத்தலைவர் எ.வ.வே.கம்பன், வருவாய் கோட்டாட்சியர் கவிதா, சட்டமன்ற உறுப்பினர்கள் ஜோதி, அம்பேத்குமார் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சிவானந்தம், எதிரொலி மணியன், தயாநிதி ஒன்றிய செயலாளர்கள், ஒன்றியக்குழு தலைவர், தமிழ்நாடு வடிகால் வாரிய தலைமை பொறியாளர், நகராட்சி ஆணையாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News