குரூப்-4 தேர்வுக்கு அனுமதி மறுத்ததால் ஆர்டிஓ வாகனத்தை முற்றுகையிட்ட தேர்வர்கள்
ஆரணி பகுதியில் குரூப்-4 தேர்வுக்கு அனுமதி மறுத்ததால் ஆர்டிஓ வாகனத்தை தேர்வர்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு;
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி பகுதியில் இன்று டி.என்.பி.எஸ்.சி குரூப்-4 தேர்வு 42 மையங்களில் நடந்தது. சுமார் 12ஆயிரத்து 940பேர் தேர்வு எழுதினர். ஆரணி டவுன் கோட்டை அருகே உள்ள அரசு நிதி உதவி பெறும் பள்ளியில் மையத்தில் தேர்வு எழுத மாணவர்கள் ஆர்வத்துடன் வருகைபுரிந்தனர். மேலும் காலை 9 மணிக்கு மேல் தேர்வு எழுத வரும் நபர்களை அனுமதி கிடையாது என்று கூறியதால் சுமார் 100க்கும் மேற்பட்டோர் அதிர்ச்சியடைந்ந்தனர்.
பின்னர் போராட்டத்தில் ஈடுபட்டு தேர்வு மையத்திற்கு அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர் ஆனால் வருவாய் துறையினர் அனுமதி மறுத்துவிட்டனர்.பின்னர் தகவலறிந்து வந்த ஆர்டிஓ தனலட்சுமியின் வாகனத்தை வழிமறித்து தேர்வு எழுத அனுமதிக்க கோரிக்கை விடுத்தனர். ஆனால் காலதாமதம் ஏற்பட்டதால் அனுமதி கிடையாது என்று திட்டவட்டமாக மறுத்துவிட்டார்.இதனால் தேர்வு எழுத வந்தவர்கள் என்ன செய்வது என்று தெரியாமல் கண்கலங்கியவாறு திரும்பி சென்றனர்.போளூர் தாலுகாவில் இன்று குரூப் 4 தேர்வுகள் 25 மையங்களில் நடைபெற்றது. இதில் 6000 பேர் கலந்து கொண்டு தேர்வு எழுதினர்.