அமைச்சர் உதயநிதியின் உருவ பொம்மை எரிக்க முயற்சி: இந்து முன்னணியினர் கைது
அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை கண்டித்து, இந்து முன்னணி அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்;
இந்து முன்னணியினரை கைது செய்த போலீஸார்.
சனாதன தர்மத்துக்கு எதிராக கருத்து தெரிவித்து இந்து மதத்தை இழிவுப்படுத்தியதாகக் கூறி, தமிழக விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் உருவ பொம்மையை திருவண்ணாமலையில் எரிக்க முயன்ற இந்து முன்னணியைச் சேர்ந்தவர்களை போலீஸார் கைது செய்தனர்.
இந்து முன்னணி சார்பில், திருவண்ணாமலை சட்டப்பேரவை உறுப்பினர் அலுவலகம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. நகரத் தலைவர் செந்தில் தலைமை வகித்தார். கோட்டத் தலைவர் மகேஷ், மாவட்ட பொதுச் செயலாளர் வழக்கறிஞர் அருண்குமார், பாஜக மாவட்ட தலைவர் பாலசுப்ரமணியன் உள்ளிட்டோர் பங்கேற்று அமைச்சர்கள் சேகர்பாபு மற்றும் உதயநிதி ஸ்டாலின் ஆகியோரை கண்டித்து, கண்டன முழக்கமிட்டனர்.
அப்போது, பாதுகாப்பு பணியில் இருந்த காவல் துணை கண்காணிப்பாளர் குணசேகரன் தலைமையிலான காவல் துறையினர், கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கு அனுமதி கிடையாது என தெரிவித்தனர். மேலும், ஆர்ப்பாட்டத்தை முடித்து கொள்ள வேண்டும் எனக் கூறினர்..
இதற்கிடையில், மறைவாக வைத்திருந்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் உருவ பொம்மையை கொண்டு தீயிட்டு எரிக்க முயன்றனர். இதையறிந்த காவல் துறையினர், உருவ பொம்மையை கைப்பற்றினர்.
இதையடுத்து தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக கூறி, இந்து முன்னணியினர் சுமார் 70 பேரை போலீஸார் கைது செய்தனர்.
ஆரணி
ஆரணியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை கண்டித்து, இந்து முன்னணி அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழக விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சனாதனம் குறித்து பேசியதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்து முன்னணி அமைப்பின் சார்பில், திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி பழைய பஸ் நிலையம் மணிகூண்டு அருகே ஆர்ப்பாட்டம் நடந்தது.
திருவண்ணாமலை வடக்கு மாவட்ட தலைவர் ஆறுமுகம் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் தாமோதரன் முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக கோட்ட தலைவர் மகேஷ் கலந்து கொண்டார். அவர் வருவதற்கு முன்பு பஸ் நிலைய வளாகம் பரபரப்பாக காணப்பட்டது. அப்போது போலீசார் ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கு அனுமதி இல்லை என கூறினர்.
அதற்கு இந்து முன்னணி அமைப்பினர் 5 நிமிடத்தில் முடித்து விடுகிறோம் என பேசிக்கொண்டிருக்கும் போது திடீரென சிலர் உதயநிதி ஸ்டாலின் உருவ பொம்மையை பெட்ரோல் ஊற்றி கொண்டு வந்தனர். இதனையறிந்த ஆரணி டவுன் போலீசார் உடனடியாக உருவ பொம்மையை அவர்களிடம் இருந்து பறித்துச்சென்றனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் இந்து முன்னணி நகர தலைவர் நாகராஜன், துணைத்தலைவர் லோகு, மாவட்ட இளைஞரணி தலைவர் விக்னேஷ் மற்றும் பா.ஜ.க. நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இதையடுத்து 2 பெண்கள் உள்பட 62 பேரை போலீசார் கைது செய்தனர்.