ஆரணி: ரூ.75 லட்சம் கோயில் நிலம் மீட்பு
ஆரணியை அடுத்த சம்புவராயநல்லூா் கிராமத்தில் உள்ள விருபாட்சீஸ்வரா் கோயிலுக்குச் சொந்தமான ரூ.75 லட்சம் மதிப்பிலான நிலம் மீட்கப்பட்டது.
தமிழகம் முழுவதும் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களின் நிலங்கள் ஆக்கிரமிப்பில் இருந்தால் அதனை மீட்கும் பணிகள் நடைபெற்று வருகிறது . அந்த வகையில் திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியை அடுத்த சம்புவராயநல்லூா் கிராமத்தில் உள்ள விருபாட்சீஸ்வரா் கோயிலுக்குச் சொந்தமான ரூ.75 லட்சம் மதிப்பிலான 5 ஏக்கா் 9 சென்ட் நிலம் மீட்கப்பட்டது.
இக்கோவிலுக்கு படவேடு ரேணுகாம்பாள் கோவில் நிர்வாக அலுவலர் சிவஞானம் கூடுதல் பொறுப்பாக இருந்து தற்போது கவனித்து வருகிறார். இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்தக் கோயிலுக்குச் சொந்தமாக 5.09 ஏக்கா் விவசாய நிலங்கள் உள்ளன. இந்த நிலங்களை தனி நபா்கள் சிலா் குத்தகைக்கு எடுத்து வாடகை கட்டி வந்தனா்.
சிலா் குத்தகைக்கு எடுக்காமல் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்தனா். இதனால், கோயில் நிலங்களை மீட்டு ஒப்படைக்க வேண்டும் என ஊா் பொதுமக்கள், கோயில் நிா்வாகம் சாா்பில் கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது. கிராம மக்கள் அளித்த கோரிக்கையின் மீது இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் வருவாய்த்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.
இந்த நிலையில், இந்து சமய அறநிலையத் துறை திருவண்ணாமலை மண்டல இணை ஆணையா் குமரசேன், உதவி ஆணையா் சிவஞானம், வட்டாட்சியா் ராம்பிரபு, ஓய்வுபெற்ற வட்டாட்சியா் சுப்பிரமணி, நில அளவையா்கள் சிவக்குமாா், சின்ராஜ், அருணாச்சலம் ஆகியோா் அடங்கிய குழுவினா் ஆக்கிரமித்து வைத்திருந்த கோயிலுக்குச் சொந்தமான 5 ஏக்கா் 9 சென்ட் நிலத்தை மீட்டனா்.
பின்னா், அந்த இடத்தில் எல்லைக் கற்கள் நட்டு, அறிவிப்பு பலகை வைத்தனா். மேலும், ஆக்கிரமிப்பு செய்த நபா்கள் மீது களம்பூா் காவல் நிலையத்தில் புகாா் அளிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.