ஆரணி ஊராட்சி ஒன்றியக் குழு கூட்டம்; கவுன்சிலர்கள் வெளிநடப்பு

ஆரணி ஊராட்சி ஒன்றியக் குழுவின் கூட்டத்தில், அதிமுக கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தனர்.;

Update: 2023-09-20 03:06 GMT

ஆரணி ஊராட்சி ஒன்றியக் குழு கூட்டம் நடந்தது.

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி ஒன்றியத்தில் ரூ.1.11 கோடியில் வளா்ச்சிப் பணிகளை மேற்கொள்ள ஊராட்சி ஒன்றியக் குழுக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

ஆரணி ஊராட்சி ஒன்றியக் குழுவின் கூட்டம் அதன் தலைவா் கனிமொழி சுந்தா் தலைமையில் நடைபெற்றது. துணைத் தலைவா் ராஜேந்திரன், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் திலகவதி, பிரபாகரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கூட்டத்தில் அ.தி.மு.க. கவுன்சிலர்கள் கவிதா அவரது கணவர் பாபுவுடனும், கவுரி அவரது மகன் கோபியுடனும், கலா ரகு தனது மகன் சதீசுடனும் பங்கேற்க வந்தனர். அப்போது ஒன்றிய குழு துணை தலைவர் ராஜேந்திரன் ஒன்றிய குழு அரங்கில் கவுன்சிலர் மட்டுமே இருக்க வேண்டும். பார்வையாளர்கள் யாருக்கும் அனுமதி இல்லை என்றார்.

அப்போது கவுன்சிலர்கள் கவிதா பாபு, ஜெயபிரகாஷ், கலா ரகு, கவுரி, யசோதா சண்முகம் ஆகியோர் ஒன்றாக எழுந்து  தற்போது 28 துறை சார்ந்த அலுவலர்களுக்கு தகவல் அனுப்பப்பட்டுள்ளது. ஆனால் ஒரு துறையில் இருந்து மட்டுமே கூட்டத்தில் அலுவலர் கலந்து கொண்டு உள்ளார். மற்ற துறை அலுவலர்களும் கலந்து கொள்வதில்லை. இந்த கூட்டம் ஏன் நடத்த வேண்டும் கூட்டத்தை ஒத்தி வையுங்கள் என அ.தி.மு.க. கவுன்சிலர்கள் ஒட்டுமொத்தமாக கூறினர்.

ஜெயப்பிரகாஷ் (அ.தி.மு.க.) பேசுகையில்,

முள்ளண்டிரம் பகுதியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையம் பராமரிக்கப்படவில்லை. தற்போது டெங்கு காய்ச்சல் பரவும் நிலை உள்ளதால் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், மேலும் 12 புத்தூர் பகுதியில் 2 குடும்பத்தினர் மின் இணைப்பு கேட்டு நீண்ட காலமாக காத்திருக்கிறார்கள், மேலும் வேதாஜிபுரம் ஊராட்சி டேங்க் ஆபரேட்டருக்கு 12 மாத காலமாக சம்பளம் வழங்கப்படவில்லை என கூறினார்.

ஆணையாளர் (கிராம ஊராட்சி) பிரபாகரன், வேதாஜிபுரம் டேங்க் ஆபரேட்டருக்கு உடனடியாக சம்பளம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும், என்றார்.

மின்வாரியத்துறை சார்பில் கலந்து கொண்ட அதிகாரி, வேதாஜிபுரத்தில் மின் இணைப்பு கிடைக்காத 2 குடும்பத்தினர் பெயர் கொடுத்தால் அவர்களுக்கு மின் இணைப்பு தருவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார்.

தொடர்ந்து அ.தி.மு.க. கவுன்சிலர்கள் தலைவரின் இருக்கையை முற்றுகையிட்டு தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். பின்னர் அனைவரும் வெளிநடப்பு செய்தனர்.

இதைத் தொடா்ந்து,

கூட்டத்தில் ஆரணி ஒன்றியத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் உள்ள கழிப்பறைகளை பராமரிப்பவா்களுக்கு ஜனவரி 2023 முதல் மாா்ச் 2023 வரையிலான காலத்துக்கு ஊதியம் வழங்க ரூ.5 லட்சத்து 15 ஆயிரம் ஒதுக்குதல், வேலப்பாடி, கல்லேரிப்பட்டு, பையூா், சேவூா், முள்ளண்டிரம், மொரப்பந்தாங்கள், பூசிமலைக்குப்பம், சிறுமூா், எஸ்.யூ.வனம், அக்ராபாளையம், ஆதனூா், ராட்டிணமங்கலம், மட்டதாரி, பனையூா், எஸ்.வி.நகரம், இரும்பேடு, மாமண்டூா், வடுக்கசாத்து, சித்தேரி, மெய்யூா் ஆகிய ஊராட்சிகளில் ஆதிதிராவிட குடியிருப்பு பகுதியில் பக்கக் கால்வாய், சுகாதார வளாகம், காரியமேடை, பேவா் பிளாக் சாலை, பிராமணா் குளம் சீரமைத்தல், பழுதடைந்த அங்கன்வாடி கட்டடத்தை சீரமைத்தல், நாடக மேடை அமைத்தல், மகளிா் சுயஉதவிக் குழுவினரின் கட்டடத்தை புனரமைத்தல் உள்ளிட்ட பல்வேறு வளா்ச்சித் திட்டப் பணிகள் மற்றும் அடிப்படை வசதிகளை ஒன்றிய பொதுநிதியில் ரூ.1.11 கோடியில் மேற்கொள்ள தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

Similar News