'கண்டா வரச் சொல்லுங்க' - ஆரணி மக்களவை தொகுதி சுவரொட்டியால் பரபரப்பு
ஆரணி மக்களவை தொகுதியில் "கண்டா வரச் சொல்லுங்க" என காங்கிரஸ் எம்.பியை விமர்சித்து ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டியால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ஆரணி மக்களவைத் தொகுதியில் "கண்டா வரச் சொல்லுங்க" என காங்கிரஸ் எம்.பியை விமர்சித்து ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டியால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இந்தியா முழுவதும் நாடாளுமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் அல்லது மே மாதம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தேர்தலில் வெற்றி வாகை சூட அனைத்து அரசியல் கட்சிகளும் கூட்டணி அமைத்தல், வேட்பாளர்களை தேர்வு செய்தல் என தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
மக்களை கவர்ந்திழுக்கும் வகையில் தேர்தல் வாக்குறுதிகளை கவர்ச்சிகரமாக இருக்கும் வகையில் தயாரித்து வருகின்றனர்.இந்நிலையில் மக்களை கவர்ந்திழுக்கும் வகையில் சினிமா வசனங்களை முன்னிலைப்படுத்தி சமூக வலைத்தளம் மற்றும் சுவரொட்டிகள் மூலம் தற்போது பிரச்சாரங்கள் நடைபெற்று வருகிறது, அதில் "கண்டா வர சொல்லுங்க" எனும் பிரச்சாரம் தமிழகத்தில் கவனம் ஈர்த்துள்ளது.
இந்நிலையில், திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி மக்களவைத் தொகுதியில் "கண்டா வரச் சொல்லுங்க" எனும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. இந்த சுவரொட்டியில் "எங்க தொகுதி எம்பியை காணவில்லை"? என குறிப்பிட்டுள்ளதால் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளன.
ஆரணி மக்களவைத் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராக காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த விஷ்ணு பிரசாத் உள்ளார். கட்சி நிகழ்ச்சியில் முழுமையாக பங்கேற்காமல், பெயரளவில் வந்து செல்வதாக, இவர் மீது கடும் அதிருப்தியில் காங்கிரஸ் கட்சியினரே உள்ளதாக சொல்லப்படுகிறது.
குறிப்பாக ஆரணி மக்களின் நீண்ட நாள் கனவான பிரதான திட்டங்களான திண்டிவனம் - திருவண்ணாமலை மற்றும் திண்டிவனம் - நகரி இடையே புதிய ரயில் பாதை திட்டத்தில் முன்னெடுப்பு பணியில் கவனம் செலுத்ததால் தொடக்க நிலையிலேயே இருப்பதாக தொகுதி மக்களும் மன குமுறலில் இருப்பதாக காங்கிரஸ் கட்சியினரே கூறுகின்றனர்.
நெசவாளர்கள், விவசாய தொழிலாளர்களின் வாழ்வாதார முன்னேற்றத்துக்கு கவனம் செலுத்தவில்லை. இதேபோல், அவரது சொந்த தொகுதியான செய்யாறு சட்டப்பேரவைத் தொகுதியில் கடந்த 8 மாதமாக நீடித்து வரும் மேல்மா சிப்காட் விரிவாக்க திட்டத்தில் மவுனம் காப்பது விவசாயிகளிடையே அதிர்வலையை ஏற்படுத்தி இருக்கிறது.
இந்தச் சூழலில், எங்க தொகுதி எம்பியை காணவில்லை, கண்டா வரச் சொல்லுங்க என்ற சுவரொட்டி ஆரணி மக்களவைத் தொகுதியில் பொதுமக்களிடையே ஒரு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்த சுவரொட்டி குறித்து ஆரணி எம்பி விஷ்ணு பிரசாத் ஆதரவாளர்கள் கூறும்போது, "மத்திய அரசின் திட்டங்களை மக்களுக்கு சென்றடைய வேண்டும் என்பதில் உறுதியாக இருந்து கடந்த 5 ஆண்டுகளாக செயல்பட்டுள்ளார். பிரதமர் வீடு வழங்கும் திட்டம், ஜல் ஜீவன் திட்டம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் நடைபெற்றுள்ள முறைகேடுகளை கண்டறிந்து மாவட்ட நிர்வாகத்தில் கவனத்துக்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுத்துள்ளார். அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக, சுவரொட்டி ஒட்டப்பட்டுள்ளது" என்று கூறினர்.
சில நாட்களாக தமிழகத்தின் பல பகுதிகளில், இதுபோன்ற போஸ்டர் ஒட்டுவது அதிகரித்துள்ளது. மாம்பழ சீசன் போல இது, தேர்தல் சீசன் என, மக்கள் கருத துவங்கிவிட்டனர்.