ஆரணியில் ஆக்கிரமிப்புகளை அகற்றவில்லை : நகர மன்ற உறுப்பினர்கள் புகார்
ஆரணியில் ஆக்கிரமிப்புகளை அகற்றவில்லை நகர மன்ற உறுப்பினர்கள் புகார் தெரிவித்தனர்
ஆரணியில் ஆக்கிரமிப்புகளை அகற்றவில்லை endru நகர மன்ற உறுப்பினர்கள் புகார் தெரிவித்தனர்.
ஆரணி நகா்மன்றக் கூட்டம் அதன் தலைவா் மணி தலைமையில் நடைபெற்றது. துணை தலைவா் பாரி பாபு, ஆணையா் குமரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
கூட்டத்தில் புதிதாக பொறுப்பு ஏற்றுள்ள நகராட்சி ஆணையாளர் குமரன் உறுப்பினர்கள் முன்னிலையில் அறிமுகம் செய்யப்பட்டார்.
நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளின் தேர்ந்தெடுக்கப்பட்ட மேயர்கள், துணை மேயர்கள், நகர் மன்ற தலைவர்கள், துணைத்தலைவர்கள் மற்றும் மன்ற உறுப்பினர்களுக்கும் மாதந்தோறும் மதிப்பூதியம் வழங்க உத்தரவிட்ட முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கும், தமிழக அரசுக்கும் நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தொடர்ந்து மறைந்த புதிய நீதி கட்சி நிறுவனத்தலைவர் ஏ.சி.சண்முகத்தின் சகோதரரும், நகரமன்ற உறுப்பினருமான ஏ.சி.பாபு மறைவுக்கு மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.
பின்னர் கூட்டத்தில் நடந்த விவாதம் வருமாறு:-
நகா்மன்ற உறுப்பினா் சுப்பிரமணி பேசுகையில், எனது 25-ஆவது வாா்டில் கால்வாய் ஆக்கிரமிப்பு உள்ளது. எனது வார்டில் 40 தெருக்கள் உள்ளன. ஆனால் தூய்மை பணியாளர்கள் 4 தெருக்களில் மட்டுமே கால்வாயில் தூர்வாருகின்றனர். மீதமுள்ள தெருக்களை கிடப்பில் போட்டு விடுகின்றனர். மேலும் தூய்மை பணியாளர்களுக்கு கையுறை, தூய்மை பணிக்கான உபகரணங்கள் வழங்கப்படுகிறதா?, தூய்மை பணியாளர்களுக்கு இன்சூரன்ஸ் காப்பீடு செய்யப்பட்டுள்ளதா? என்பதை தெரிவிக்க வேண்டும்.
அரிசி ஆலை ஒன்று ஆக்கிரமிப்பு செய்துள்ளதால் பலமுறை மனு கொடுத்தும் நடவடிக்கை இல்லை. உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் அடுத்த கூட்டத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபடுவேன்.
சுகாதார அலுவலர் மோகனசுந்தரம் பதில் அளிக்கையில் தூய்மை பணியாளர்களுக்கு கையுறை மற்றும் உபகரணங்கள் தனியார் ஒப்பந்ததாரர் மூலம் வழங்கப்படுகிறது. அவர்களுக்கு இன்சூரன்ஸ் காப்பீடும் செய்யப்பட்டுள்ளது. ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி சம்பந்தமாக தாசில்தாருக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. பதில் வந்தவுடன் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.
ரவி (தி.மு.க.):- நகரில் நாய்கள் தொல்லை அதிகமாக உள்ளது. அதேபோல பஜாரில் மாடுகள் அதிகளவில் சுற்றித் திரிகின்றன. புதிதாக மின்கம்பம் அமைத்து தெரு விளக்குகள் அமைக்கப்பட வேண்டும்.
ஆணையாளர் குமரன்:- நாய்களைப் பிடிக்க ஒப்பந்ததாரருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது 4-ந் தேதிக்கு பிறகு நாய்களை பிடித்து அவற்றிற்கு கருத்தடை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மாடுகளைப் பிடிக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்
உறுப்பினா் ஜெயவேலு: நகராட்சியில் உள்ள கடை வாடகை பிரச்னை குறித்து உடனடியாக முடிவெடுக்கவும். 200 கடைகளுக்கு மேல் வாடகை வசூலிக்க முடியாமல் உள்ளது. கடைகளின் வாடகை மிகவும் அதிகமாக உள்ளது என தெரிவித்தார்
வருவாய் அதிகாரி ஆன்டனி பதில் அளிக்கையில், நகராட்சிக்குச் சொந்தமாக 694 கடைகள் உள்ளன. இதில் 200 கடைகள் காலியாக உள்ளன.
இதில், 1961-ஆம் ஆண்டு கட்டப்பட்ட கடைகளை இடித்து விட்டு புதிதாக கட்டப்படவுள்ளன. பொதுப்பணித் துறையினா் வாடகை நிா்ணயம் செய்துள்ளதை அதிகமாக உள்ளதாகக் கூறி 200 கடைகள் வாடகை விடமுடியவில்லை. அரசு நிா்ணயித்த தொகையை விட குறைவாக ஏலம் விடமுடியாது என தெரிவித்தார்
இவ்வாறு விவாதம் நடந்தது. மேலும் அனைத்து உறுப்பினர்களும் தங்களது வார்டில் உள்ள குறைகளையும் தேவைகளையும் பேசினர்.