50 ஆண்டுகளுக்குபின் சந்தித்த முன்னாள் மாணவர்கள்
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி பள்ளியில் படித்த முன்னாள் மாணவர்கள் 50 ஆண்டுகளுக்கு பிறகு சந்தித்துக்கொண்டனர்.;
ஆரணி கோட்டை மைதானம் அருகே உள்ள அரசு நிதி உதவி பெறும் பள்ளியான சுப்பிரமணிய சாஸ்திரியார் மேல்நிலைப்பள்ளி பழமையான பள்ளியாக விளங்கி வருகிறது. இந்த பள்ளியில் 1970-71-ம் ஆண்டுகளில் 10-ம் வகுப்பு படித்த 70 முன்னாள் மாணவர்கள் தங்கள் குடும்பத்தினருடன் சந்திக்கும் நிகழ்ச்சி நடந்தது.
இதில் இந்த மாணவர்கள் படித்தபோது அவர்களுக்கு ஆசிரியராக இருந்தவர்களும் கலந்து கொண்டனர். அவர்களது காலில் முன்னாள் மாணவர்கள் விழுந்து ஆசி பெற்றனர். மேலும் தற்போதுள்ள தலைமை ஆசிரியர், பள்ளி நிர்வாகிகளும் கவுரவிக்கப்பட்டனர்.
முன்னாள் மாணவர்கள் 70 பேரும் அரசு மற்றும் தனியார் துறைகளில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்களாவர். தொழில் அதிபர்களாகவும் பலர் உள்ளனர். சென்னை ,பெங்களூரூ, கிருஷ்ணகிரி, தஞ்சாவூர், கோவை, திருச்சி, வேலூர் உள்பட பல்வேறு ஊர்களில் இவர்கள் வசித்து வருகின்றனர்.
தாங்கள் படிக்கும்போது பள்ளியில் எங்கு அமர்ந்தோம், எப்படி பழகினோம், அவர்களின் பட்டப் பெயர்களைச் சொல்லி ஒருவரை ஒருவர் அழைத்துக் கொண்டு பேசி மகிழ்ந்தனர். இந்த ஒருங்கிணைப்பு நிகழ்ச்சி கடந்த ஒன்றரை ஆண்டு காலமாக நடத்தி இன்றுதான் நிறைவு பெற்றது என முன்னாள் மாணவர்கள் மனமகிழ்ந்து பேசி வாழ்த்து தெரிவித்தனர். பள்ளிக்கும் முன்னாள் மாணவர்கள் நினைவுப் பரிசுகள் வழங்கி பெருமைப்படுத்தினர்.