திருவண்ணாமலை மாவட்டத்தில் உரக் கடைகளில் வேளாண் அதிகாரிகள் ஆய்வு
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள உரக்கிடங்கு, விற்பனை நிலையங்களில் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் யூரியா உரம் விற்பனை தொடர்பாக பெறப்பட்ட புகார்களை தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில் மாவட்டத்தில் உள்ள மொத்த, சில்லரை உர விற்பனை நிலையங்கள் மற்றும் உரக்கிடங்குகளில் சிறப்பு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
இதற்காக வேளாண்மை உதவி இயக்குனர்கள் தலைமையில் மாவட்டத்தில் உள்ள 17 வட்டாரத்திலும் சிறப்புக்குழு அமைக்கப்பட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. திருவண்ணாமலையில் உள்ள தனியார் உரக் கிடங்கு மற்றும் உர விற்பனை நிலையங்களில் வேளாண்மை துணை இயக்குனர் வடமலை தலைமையில் வேளாண் உதவி இயக்குனர்கள் அன்பழகன், ராம்பிரபு, வேளாண்மை அலுவலர் ஷோபனா ஆகியோர் ஆய்வு செய்தனர்.
அப்போது அரசு நிர்ணயித்த விலையில் உரம் வினியோகம் செய்தல், உர இருப்பு, கொள்முதல் செய்யப்பட்டதற்கான உரிய ஆவணங்கள் பராமரித்தல், உரங்களின் விலைப்பட்டியல் பலகையை பார்வைக்கு தெரியும்படி வைத்தல் ஆகியவை குறித்து பார்வையிடப்பட்டு ஆய்வு செய்யப்பட்டது.
மேலும் வெளி மாவட்டங்களை சேர்ந்தவர்களுக்கு உரம் விற்பனை செய்யப்பட்டுள்ளதா என்பது குறித்தும் பதிவேடுகளை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். ஆய்வு குறித்து வேளாண்மை அதிகாரிகள் கூறுகையில், யூரியாவுடன் இதர இடுபொருட்களை கட்டாயப்படுத்தி விற்பனை செய்யக்கூடாது என விற்பனையாளர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.
ஆரணி பகுதியில் உள்ள மொத்த உர விற்பனை நிலையங்களில் வேளாண்மை இணை இயக்குனர் மாரியப்பன் தலைமையில் வேளாண் உதவி இயக்குனர் பவித்ரா தேவி வேளாண் அலுவலர் பார்த்திபன் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.
ஆய்வின்போது உரிய ஆவணங்களுடன் உரங்கள் பெறப்பட்டதா, சில்லறை விற்பனை நிலையங்களுக்கு உரிய ஆவணங்களுடன் உரங்கள் மாற்றம் செய்யப்பட்டதா, விவசாயிகளுக்கு அரசு நிர்ணயித்த விலைக்கு மிகாமல் உரங்கள் விற்பனை செய்யப்படுகிறதா என்றும் உர மூட்டைகள் இருப்பு விபரம், உரிமங்கள், காலாவதி நாள் உள்ளிட்டவை குறித்தும் ஆய்வு செய்தனர்.
இந்த ஆய்வின்போது உரக் கட்டுப்பாடு ஆணை 1985 ஐ. வீரிய செயலுக்காக இரண்டு உற கடைகளில் கூட உரிமம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டது.