ஆரணி நகர்மன்றக் கூட்டத்தில் இருந்து அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு...
ஆரணி நகர்மன்றக் கூட்டத்தில் இருந்து அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்ததால் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி நகராட்சியின் மன்றக் கூட்டம் தலைவர் மணி தலைமையில் நடைபபெற்றது. துணைத் தலைவர் பாரி பாபு முன்னிலை வகித்தார். ஆணையாளர் தமிழ்ச்செல்வி வரவேற்றார். கூட்டத்தில், விடுதலை சிறுத்தை கட்சியைச் சேர்ந்த நகர்மன்ற உறுப்பினர் பவானி கிருஷ்ணகுமார் கையில் ஒரு பதாகையுடன் பங்கேற்றார்.
அந்த பதாகையில், புதுக்கோட்டை மாவட்டத்தில் பட்டியலின மக்கள் வசிக்கும் பகுதியில் உள்ள குடிநீர் தொட்டியில் மனித கழிவுகளை கலந்தவர்களை கைது செய்ய வேண்டும் என எழுதப்பட்டிருந்தது. இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. புதிய நீதி கட்சியைச் சேர்ந்த உறுப்பினர் பாபு, நகரமன்ற தலைவரிடம் மாவட்ட அமைச்சரிடம் தெரிவித்து ஆரணி பகுதியில் ரிங் ரோடு அமைத்து கொடுத்தால் நகரில் போக்குவரத்து குறையும். அதற்கு அனைத்து உறுப்பினர்களையும் அழைத்து செல்லுங்கள் நாங்களும் அமைச்சரிடம் பேசுகிறோம் என்று கூறினார்.
அப்போது தி.மு.க. உறுப்பினர் அரவிந்த் எங்கள் அமைச்சர் சிறப்பாக செய்வார் என்றார். அப்போது பாபு நான் தலைவரிடம் பேசும் போது உறுப்பினர் தலைவரிடம் கேள்வி கேட்க வேண்டும் என்னிடம் நேரடியாக வரக்கூடாது என்றார். இதனால் சிறிது நேரம் உறுப்பினர்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. ஆரணி மக்களவைத் தொகுதி உறுப்பினா் விஷ்ணுபிரசாத் கூட்டத்தில் திடீரென வந்து, நகரமன்ற தலைவரை சந்தித்து புத்தாண்டு மற்றும் பொங்கல் வாழ்த்துக்கள் தெரிவித்தார்.
ஆரணி நகராட்சியில் உள்ள 33 வாா்டு உறுப்பினா்கள் தங்கள் பகுதி ரேஷன் கடை, பக்கக் கால்வாய், சிமென்ட் சாலை, உயா்மின் கோபுர விளக்கு உள்ளிட்ட தேவைகள் குறித்து கோரிக்கை மனு கொடுங்கள். நாடாளுமன்ற உறுப்பினா் நிதியில் பணிகளை ஒதுக்கித் தருகிறேன் என்றாா் அவர். இதைத் தொடா்ந்து, நகா்மன்றத் தலைவா் மணி, நகர வளா்ச்சிப் பணிகள் குறித்து கோரிக்கை மனுவை வழங்கினாா்.
தொடர்ந்து அதிமுக உறுப்பினர் மோகன், ஆரணி சட்டமன்ற உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான சேவூர் ராமச்சந்திரனுக்கு நகரமன்றத்தில் இருந்து மன்ற கூட்டம் நடக்கும் போது அஜெண்டா அனுப்புவது முறை. ஏன் இதுவரை அனுப்பவில்லை. இனியாவது அனுப்புங்கள் என்று பேசினார். அதற்கு தலைவர் இதுவரை யாரும் சொல்லவில்லை. இனி அஜெண்டா அனுப்ப ஏற்பாடு செய்கிறேன் என்றார்.
தொடா்ந்து நடைபெற்ற கூட்டத்தில் நகா்மன்றத் தலைவா் பேசுகையில், கடந்த டிசம்பா் 13 ஆம் தேதி அதிமுக சாா்பில் நடைபெற்ற கண்டன ஆா்ப்பாட்டத்தில் அதிமுகவைச் சோந்த நகா்மன்ற துணைத் தலைவா் பாரி பாபு, பொதுப்பணித் துறை அமைச்சா் வேலுவை அவதூறாகப் பேசியதற்கு கண்டனம் தெரிவிக்கிறேன் என்றார்.
நகராட்சி காய்கறி மாா்க்கெட் அதிமுக ஆட்சியின் போது பாரி பாபு ஒப்பந்த அடிப்படையில் 144 கடைகள் வாடகைக்கு எடுத்தாா். நகராட்சி தோதல் பிரசாரத்தின் போது அமைச்சா் வேலு ஒப்பந்த காய்கறிக் கடைகள் மீட்கப்பட்டு மீண்டும் காய்கறி வியாபாரிகளிடம் ஒப்படைக்கப்படும் என்று கூறினாா்.
அதன்படி, 144 காய்கறிக் கடைகளின் ஒப்பந்ததாரா் பாரி பாபுவின் ஒப்பந்தத்தை ரத்து செய்து காய்கறி வியாபாரிகளிடம் கடைகள் மீண்டும் ஒப்படைக்கப்படும் என்று தீா்மானம் கொண்டு வந்தாா். இதைத் தொடா்ந்து, நகா்மன்ற துணைத் தலைவா் பாரி பாபு பேசுகையில், நகா்மன்றக் கூட்டம் மக்கள் பிரச்னை குறித்து பேசுவதற்கு மட்டுமே. இது அரசியல் மேடை இல்லை. கண்டன தீா்மானம் கொண்டு வருவதற்கு எதிா்ப்பு தெரிவிக்கிறேன் என்றாா். பின்னா், அவா் தலைமையில் அதிமுகவைச் சேர்ந்த உறுப்பினா்கள் வெளிநடப்பு செய்தனா்.