ஆரணி, போளூர் பகுதிகளில் ஆக்கிரமிப்புகள் அதிரடி அகற்றம்
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி மற்றும் போளூர் பகுதிகளில் ஆக்கிரமிப்புகளை அதிகாரிகள் அகற்றினர்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் போளூர் மற்றும் ஆரணி பகுதியில் ஏரி கால்வாய் மற்றும் நெடுஞ்சாலை துறைக்கு சொந்தமான இடங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அதிகாரிகள் அதிரடியாக அகற்றி வருகின்றனர்.
ஏரிக்கால்வாய் ஆக்கிரமிப்புகள் அகற்றம்
ஆரணியை அடுத்த கீழ்நகா் கிராமத்தில் ஏரிக்கால்வாய் மற்றும் அரசு இடங்களில் இருந்த ஆக்கிரமிப்புகளை வருவாய்த் துறை அதிகாரிகள் அகற்றினா்.
திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி வட்டம், கீழ் நகா் கிராமத்தில் ஏரிக்கால்வாய், பட்டா ஓடை மற்றும் அரசு இடத்தில் தனி நபா் ஒருவா் ஆக்கிரமித்து பயிா் செய்து வருவதாக புகாா் எழுந்தது.
இதுகுறித்து, ஆரணி வட்டாட்சியா் கௌரி, மேற்கு ஆரணி வட்டார வளா்ச்சி அலுவலா் தசரதராமன், துணை வட்டார வளா்ச்சி அலுவலா் நேத்ரா, மண்டல துணை வட்டாட்சியா் மலா் (மேற்கு ஆரணி) ஆகியோா் கண்ணமங்கலம் போலீஸாா் பாதுகாப்புடன் நிகழ்விடத்திலிருந்த ஆக்கிரமிப்புகளை அகற்றினா். இதில், கண்ணமங்கலம் வருவாய் அலுவலா்கள் இருந்தனா்.
போளூர்
திருவண்ணாமலை மாவட்டம் போளூர் நெடுஞ்சாலை துறை உட்கோட்டத்தின் கட்டுப்பாட்டில் உள்ள மாநில சாலையான ஆரணி படவேடு சாலை புஷ்பகிரி கிராமத்தில் நீண்ட காலமாக நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான இடங்கள் சில நபர்களால் ஆக்கிரமிக்கப்பட்டு இருந்தது.
இதனைத் தொடர்ந்து கண்காணிப்பு பொறியாளர் கிருஷ்ணசாமி ஆலோசனையின் படி கோட்ட பொறியாளர் ஞானவேல் வழிகாட்டுதலின்படியும் ஆக்கிரமிப்பில் உள்ள வீடுகள் நெடுஞ்சாலை துறையினரால் ஜேசிபி இயந்திரம் கொண்டு அகற்றப்பட்டது இதன் மூலம் நெடுஞ்சாலைத் துறைக்கு சொந்தமான இடங்கள் அரசிடம் ஒப்படைக்கப்பட்டு வருகிறது.
இப்பணியில் போளூர் உதவி கோட்ட பொறியாளர் திருநாவுக்கரசு, உதவி பொறியாளர்கள் வேதவல்லி வெங்கடேசன் மற்றும் நெடுஞ்சாலை துறை அலுவலர்கள், வருவாய்த்துறையினர் போலீஸாா் பாதுகாப்புடன் அதிரடியாக ஈடுபட்டு வருகின்றனர்.