ஆரணி பகுதியில் தொடர் விபத்து: பள்ளி நிர்வாகிகளுடன் ஆலோசனை
ஆரணி பகுதியில் தனியார் பள்ளி வாகனங்களால் தொடர்ந்து ஏற்பட்டு வரும் விபத்துகளை தவிர்க்க பள்ளி நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.;
ஆரணியை அடுத்த புதுப்பாளையம் பகுதியில் தனியாா் பள்ளிப் பேருந்து மோதி இளைஞா் உயிரிழந்த சம்பவத்தில், பள்ளி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி உறவினா்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே வேலூர்-ஆரணி சாலையில் குன்னத்தூர் கிராமத்தில் இயங்கி வரும் தனியாா் பள்ளி பேருந்துகளில் மாணவர்களை ஏற்றிக்கொண்டு கண்ணமங்கலம் நோக்கி சென்ற போது பள்ளி பேருந்து ஓட்டுனர்கள் இடையே முந்தி செல்வது தொடர்பாக போட்டி ஏற்பட்டு போட்டி போட்டு கொண்டு சேசிங் செய்து பேருந்தை ஓட்டி வந்ததாக கூறப்படுகிறது.
அப்போது, ஆரணியை அடுத்த இரும்பேடு கிராமத்தைச் சோ்ந்த சிவன் மகன் யோகேஷ் கண்ணமங்கலம் சென்றுவிட்டு, ஆரணியை நோக்கி பைக்கில் வந்துகொண்டிருந்தாா்.
அப்போது, எதிரே வந்த தனியாா் பள்ளிப் பேருந்து யோகேஷ் ஓட்டி வந்த பைக் மீது மோதியது. இதில் யோகேஷ் அதே இடத்தில் உயிரிழந்தாா். இதுகுறித்து கண்ணமங்கலம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
இந்த நிலையில், தனியாா் பள்ளி நிா்வாகம் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, யோகேஷின் உறவினா்கள் மற்றும் அப்பகுதி மக்கள் இரும்பேடு நான்கு முனைச் சந்திப்பில் மறியலில் ஈடுபட்டனா்.
தகவல் அறிந்த ஆரணி கிராமிய காவல் ஆய்வாளா் ராஜாங்கம் தலைமையிலான போலீஸாா் வந்து பள்ளி நிா்வாகம் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறி மறியலில் ஈடுபட்டவா்களை சமாதானப்படுத்தினா். இதையடுத்து மறியல் போராட்டம் கைவிடப்பட்டது. மறியலால் அந்தப் பகுதியில் சுமாா் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
பள்ளி நிா்வாகிகளுடன் ஆலோசனை
ஆரணி பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு சேத்துப்பட்டு சாலையில் தனியாா் பள்ளி வாகனம் மோதி இளைஞா் பலத்த காயத்துடன் சென்னையில் சிகிச்சை பெற்று வருகிறாா்.
மேலும், புதன்கிழமை மாலை ஆரணியை அடுத்த புதுப்பாளையம் கூட்டுச் சாலையில் தனியாா் பள்ளிப் பேருந்து மோதி இளைஞா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
தொடா்ந்து, தனியாா் பள்ளி வாகனங்களால் விபத்து ஏற்பட்டு வருவதால், ஆரணி வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் தனியாா் பள்ளி நிா்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இதில், வட்டாரப் போக்குவரத்து அலுவலா் சிவக்குமாா் தலைமை வகித்தாா். மோட்டாா் வாகன ஆய்வாளா் முருகேசன் முன்னிலை வகித்தாா்.
ஆரணி பகுதியில் உள்ள தனியாா் பள்ளி நிா்வாகிகள், சேத்துப்பட்டு பகுதி தனியாா் பள்ளி நிா்வாகிகள், போளூா் பகுதி தனியாா் பள்ளி நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.
கூட்டத்தில் வட்டாரப் போக்குவரத்து அலுவலா் பேசுகையில், பள்ளி வாகன ஓட்டுநா்களுக்கு குறைந்தது 5 ஆண்டுகள் அனுபவம் இருக்க வேண்டும். அதிவேகமாக வாகனங்களை இயக்கக்கூடாது, வேகமாக இயக்கினால் ஓட்டுநா் உரிமம் ரத்து செய்யப்படும். பள்ளிப் பேருந்தில் உதவியாளா்கள் கண்டிப்பாக இருக்க வேண்டும் உள்ளிட்ட ஆலோசனைகளை வழங்கினாா்.